இந்தியாவில் இருந்து பாரதிய ஜனதா கட்சியை வெளியேற்றுவோம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறைகூவல் விடுத்துள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு

மத்திய பாரதிய ஜனதா அரசு எல்லாத் துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது. பாரதிய ஜனதா ஆட்சியில் வெளிநாடுகளுடனான நல்லுறவு மிகவும் மோசமடைந்துள்ளது. மேற்கு வங்காள மாநில எல்லையை ஒட்டியுள்ள நேபாளம், வங்காள தேசம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதில் பா.ஜ.க.அரசு தோல்வி கண்டுள்ளது.

`இந்தியாவில் இருந்து பாரதிய ஜனதா கட்சியே வெளியேறு' என்ற இயக்கம் ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.

இந்தியாவில் இருந்து பாரதிய ஜனதாவை வெளியேற்றுவோம். இது நம் முன் உள்ள சவாலாகும். சாரதா மற்றும் நாரதா வழக்குகள் மூலம் பாரதிய ஜனதா அரசு எங்களை அடக்க நினைக்கிறது. ஆனால் யாரும் எங்களை பணியவைக்க முடியாது.

18 எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமாருக்கு ஆதரவு அளித்தன.

பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க இந்த கூட்டணி 2019 நாடாளுமன்ற தேர்தலில் மேலும் விரிவடையும். பாரதிய ஜனதா கட்சி நடைபோடுவது இனி சுலபமாக இருக்காது.

சோனியா காந்தி, லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்கும் அனைவருக்கும் மேற்கு வங்காளம் ஆதரவாக நிற்கும். இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மத்திய அரசின் செல்லா பண திட்டம் மற்றும் ஜி.எஸ்.டி. வரிச்சட்டம் ஆகியவற்றை எதிர்ப்பவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் அமைப்புக்களை பிரயோகிப்பதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.