உடல்நலக் குறைவுக்கு பசுவின் கோமியம் குடித்தால் சீராகும் என்று மக்களவையில் பாஜக எம்.பி. ஒருவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

பசுவின் சிறுநீரில் எண்ணற்ற நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்றும், இது கிருமி நாசினியாக பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. மனிதர்களின் பல நோய்களை நீக்கும் மருந்தாக பசு கோமியம் உள்ளதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது. பசு கோமியத்தில் நீரிழிவு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாகவும், தோல் நோய்களை குணப்படுத்துவதாகவும், உடலில் தேவையற்ற கொழுப்புகளை குறைப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

பசுவின் கோமியம் மருந்தாக பயன்படுகிறது என்று பாஜக தலைவர்கள் அவ்வப்போது கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மேலும் ஒரு பாஜக எம்.பி. ஒருவர் மக்களவையில் பசுவின் கோமியம் கிட்னி செயலிழப்புக்கு உதவி புரிவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, எம்.பி. மீனாட்சி லெகி, பசுக்களின் கோமியம் உடலுக்கு நல்லது என்று கூறினார்.

அரசு சட்ட ஊழியர் ஒருவர் தன்னுடைய உடல்நலக் குறைவின்போது கோமியம் குடித்ததாகவும், அவருக்கு உடல்நிலை சரியானதாகவும் மீனாட்சி லெகி கூறினார். மேலும் பேசிய அவர், இது தொடர்பாக அரசாங்கம் பசுக்களுக்கும், கால்நடைகளுக்கும் தேவைப்படும் பழைமையான செடிகளை வளர்க்க ஏதேனும் முயற்சி எடுத்துள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.

மீனாட்சி லெகியின் கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மருந்து எப்போதும் மருந்துதான் என்று கூறினார்.

மீனாட்சி லெகியின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன், ராஷ்ட்ரிய கோம்பாங் உத்தாபக்த மிஷின்-ன் கீழ், கர்ணலில் ஒரு மரபணு மையம் வர உள்ளதாக தெரிவித்தார்.தற்போதுள்ள முன்னணி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதே சற்று பிரச்சனையாக இருக்கிறது. விரைவில் அதனைச் செயல்படுத்துவோம் என்றும் மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் கூறியுள்ளார்.