முஸ்லிம்கள் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், உன்னவ் தொகுதி எம்.பி.யுமான சாக்‌ஷி மகராஜ் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி இருப்பதால், அவருக்கு காங்கிரஸ், சமாஜ்வாதிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

சர்ச்சை நாயகர்

அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துவதை வாடிக்கையாக கொண்டவர் உத்தரப்பிரதேசம், உன்னவ்தொகுதி பாரதீய ஜனதா எம்.பி சாக்‌ஷி மகராஜ்.

முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் குறித்து பலமுறை சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் கூறி சிக்கலில் மாட்டிக், மன்னிப்புகேட்டுள்ளார். மாட்டிறைச்சி சாப்பிட்ட விவகாரத்தில் தலித்துக்களுக்கு எதிரான பேச்சு, இந்துத்துவா என மத துவேஷங்களை தூண்டும் பேச்சுகளை பேசி எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் கண்டனத்தை சாக்‌ஷ் மகராஜ் பெற்றுள்ளார்.

தேர்தல் பிரசாரம்

இந்நிலையில், நேற்றுமுன்தினம் உத்தரப்பிரதேசம் மீரட் நகரில் தேர்தல் பிரசாரத்தில் மகராஜ் ஈடுபட்டு இருந்தார். அப்போது, அவர் பேசுகையில், “ நாட்டில் மக்களை தொகை அதிகரிப்பதற்கு இந்துக்கள் காரணம் அல்ல. 4 திருமணம் செய்து, 4 மனைவிகள் மூலம் 40 குழந்தைகள் பெற்றும் பெறுபவர்களால்தான் மக்கள் தொகை அதிகரிக்கிறது'' என்று முஸ்லிம்கள் குறித்து மறைமுகமாக தாக்கிப் பேசினார்.

உச்ச நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் பிரசாரத்தில் மதம், சாதி, மொழி, இனம், ரீதியாக எந்த விதமாகவும் குறிப்பிட்டு பேச உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில் சாக்‌ஷி மகராஜ் பேசியது எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், சமாஜ் வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மதவேறுபாட்டை உருவாக்கும் பேச்சு

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி. மிட்டல் கூறுகையில், “ பா.ஜனதா எம்.பி. சாக்‌ஷி மகராஜ் பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திடம் நிச்சயம்முறையிடுவோம். சமீபத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைத்து மாவட்ட தேர்தல் பார்வையாளர்களும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனக்கூறி தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்துவோம். பா.ஜனதா எம்.பி.யின் பேச்சு, மதரீதியான வேறுபாடுகளை உருவாக்கும் கண்டனத்துக்குரிய பேச்சு. தேர்தல் விதிமுறைகளை மீறும் பேச்சு'' என்று தெரிவித்தார்.

பதற்றத்தால் வெற்றி கிடைக்காது

சமாஜ்வாதிகட்சியின் மூத்த தலைவர் நரேஷ் அகர்வால் கூறுகையில், “ இதுபோன்ற வகுப்புவாத செயல்கலை தூண்டும் பேச்சை பாஜனதா கட்சியினர் நிறுத்திக்கொள்ளவேண்டும். பதற்றமான சூழலை உண்டாக்கி அதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற  முடியாத'' எனத் தெரிவித்தார்.