கிறிஸ்தவர்கள் யாரும் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்ற மகாராஷ்டிரா பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. வடக்கு மும்பை மக்களவை தொகுதி எம்.பி.யான  பாரதிய ஜனதாவின் கோபால் ஷெட்டிதான் இந்த சர்ச்சையில் சிக்கி உள்ளவர்.  

இவர் மல்வானி என்ற இடத்தில் நடந்த இஸ்லாமியர்களின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் இந்துக்களும், இஸ்லாமியர்களும் சுதந்திரத்திற்காக போராடினார்கள் என்றும், கிறிஸ்தவர்கள் ஆங்கிலேயர்களைப் போல் இருந்தார்கள் என்றும் கூறியிருந்தார்.  கிறிஸ்தவர்கள் யாரும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்தார். 

இதற்கு கிறிஸ்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர் வரலாற்று அறிவு இல்லாமல் பேசுவதாக டெல்லி கத்தோலிக்க பேராயர் சாலொமோன் கூறியுள்ளார். கோபால் ஷெட்டி பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் பரவி கடும் எதிர்பலைகளை ஏற்படுத்தியது. இதனால் மன்னிப்பு கோரி உள்ள ஷெட்டி தாம் ராஜினாமா செய்ய தயராக உள்ளதாக கூறியுள்ளார்.