கர்நாடக வரலாற்றில் முதல் முறையாக 3 துணை முதல்வர்களை பாஜக தலைமை நியமித்ததால் முதலமைச்சர் எடியூரப்பா அதிர்ச்சியில் இருந்து வருகிறார். இந்நிலையில், சட்டப்பேரவையில் செல்போனில் ஆபாச படம் பார்த்த சர்ச்சையில் சிக்கிய லக்ஷ்மண் சவாடிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளக் கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பிறகு அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்தது. முதல்வராக கடந்த மாதம் 26-ம் தேதி எடியூரப்பா பதவியேற்றார். பதவியேற்று கிட்டத் தட்ட ஒரு மாதம் வரை தனது அமைச்சரவையை தீர்மானம் செய்யாமல் இருந்த எடியூரப்பா ஒருவழியாக 17 பேரை கடந்த 20-ம் தேதி அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அமைச்சரவை பட்டியலால் அதிருப்தி கோஷ்டிகள் உருவாகி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால், எடியூரப்பா இந்த விஷயத்தில் நிதானம் காட்டியதாகக் கூறப்பட்டது. 

இந்நிலையில், நேற்று அமைச்சர்களுக்கு இலாக்காக்களை எடியூரப்பா ஒதுக்கினார். கர்நாடக வரலாற்றில் முதல் முறையாக 3 துணை முதல்வராக நியமிக்கப்பட்டனர். கோவிந்த் மகதப்பா கரஜோல், அஷ்வத் நாராயண், லக்ஷ்மண் சங்கப்ப சவாடி ஆகியோர் துணை முதல்வர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், துணை முதல்வர் கோவிந்த கார்ஜோளிடம் பொதுப்பணித்துறை, டாக்டர் அஸ்வத் நாராயண் ஐடி.பிடி மற்றும் உயர் கல்வித்துறை, லக்ஷ்மண் சங்கப்ப சவாடிக்கு போக்குவரத்து துறை வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த 2018-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் லட்சுமண் சவதி தோல்வியுற்றவர். மேலும், 2012-ம் ஆண்டு கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, லட்சுமண் சவதி, சி.சி. பாட்டீல் மற்றும் கிருஷ்ணா பாலேமார் ஆகியோர் சட்டப்பேரவைக்குள் அமர்ந்து செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டு இருந்தனர். இது பெரும் சர்சசையாக வெடித்தது. இதனையடுத்து, 3 பேரும் பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில், அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கியிருப்பது கட்சி நிர்வாகிகளுக்கு இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.