ஐஏஎஸ் அதிகாரியின் மகள் ஒருவருக்கு ஹரியானா மாநில பாஜக தலைவரின் மகன் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் கைது செய்யப்பட்டார்.

ஹரியானா மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ் பராலா. இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பரான ஆஷிஷ் குமார் என்பவருடன் சேர்ந்து ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மகளை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அந்த பெண் போலீசில் புகார் செய்தார்.

அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விகாஸ் பராலா மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம், பிரிவு 354 டி மற்றும் மோட்டார் வாகன சட்டம், பிரிவு 185 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும் அவர்கள் உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து சண்டிகர் மாஜிஸ்திரேட்டு முன் வாக்குமூலம் அளிக்குமாறு அந்த பெண்ணை போலீசார் கேட்டுக்கொண்டனர். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் மீது மேலும் பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.