வரம்பை மீறி செய்தி வெளியிட்டால் சுஜாத் புஹாரிபோல் நீங்களும் கொல்லப்படுவீர்கள் என்று ஜம்மு - காஷ்மீர் மாநில பாஜக தலைவர் லால் சிங் மிரட்டும் தொணியில் பேசியுள்ளார். இவரது இந்த பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் பகுதியில் இருந்து வெளிவரும் ரைசிங் காஷ்மீர் என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரி, கடந்த 14 ஆம் தேதி வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். இதில் புகாரி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

கௌரி லங்கேஷ், சாந்தனு பௌமிக் என தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், புகாரி கொல்லப்பட்டது குறித்து நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிடிபி - பாஜக கூட்டணி முறிந்ததற்குக்கூட, புஹாரி கொலை சம்பவம் முக்கிய காரணியாக இருந்துள்ளது.

இந்த நிலையில், காஷ்மீர் மாநில பாஜக மூத்த தலைவர் லால் சிங், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், காஷ்மீர் பத்திரிகையாளர்கள் இங்கு ஒரு தவறான சூழலை ஏற்படுத்தி உள்ளனர். இவர்கள், செய்தி வெளியிடுவதில் ஒரு வரம்பை வகுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இங்கு சகோதரத்துவம் பராமரிக்கப்பட்டு முன்னேற்றம் ஏற்படும். இல்லை என்றால், சுஜாத் புஹாரிக்கு ஏற்பட்ட நிலைதான் மற்றவர்களுக்கும் நேரக் கூடும் என்று மிரட்டும் தொணியில் பேசியுள்ளார். லால் சிங்கின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

கத்துவா சிறுமி வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் கலந்து கொண்டு, தனது அமைச்சர் பதவியை இழந்தவர்தான் இந்த லால்சிங்.