இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவை அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் சண்டிகர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. 

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பணிகளை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இப்போதே தீவிரமாக தொடங்கிவிட்டார். எந்தெந்த தொகுதிகளில் பிரபலங்களை நிறுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் பிரபலங்களை போட்டியிட வைக்க திட்டமிட்டுள்ளார். அதேபோல் எந்த பிரபலத்தை எந்த தொகுதியில் நிறுத்தினால் வெற்றி பெறலாம் என திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் தொகுதி வாரியாக வலுவான வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளார் அமித் ஷா. அதற்காக பிரபலங்களை சந்தித்து ஆதரவு கோரும் நடவடிக்கைகளையும் தொடங்கிவிட்டார். அந்த வகையில் சண்டிகர் தொகுதியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் அமித் ஷாவை சந்தித்து பேசினார் கபில் தேவ். அப்போதே கபில் தேவின் ஆதரவை அமித் ஷா கோரியதாக கூறப்பட்டது. இந்நிலையில், அவரை சண்டிகர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

இதேபோல, 2014 மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட கங்குலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கங்குலி மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு பலமுறை கங்குலி பாஜகவில் இணைந்துவிட்டதாக தகவல்கள் பரவியபோதும் கங்குலி அதை மறுத்தார்.