தேர்தல் முடிவு பற்றி ஒரே வார்த்தையில் கருத்து சொன்ன கார்த்தி சிதம்பரம்! வெறுத்தெடுக்கும் பாஜக!
நான்கு மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக மூன்றில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்ட நிலையில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தை கருத்துக்கு பாஜகவினர் பதிலடி கொடுக்கின்றனர்.
அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் நான்கு மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் நிலையில், தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.
தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதன் மூலம் தென் மாநிலங்களில் ஒன்றில் கூட பாஜக ஆட்சியில் இல்லை என்ற நிலை உறுதியாகியுள்ளது. இதுபற்றி பாஜக எதிர்ப்பாளர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் நான்கு மாநில தேர்தல் முடிவுகள் குறித்து சமூக வலைதளங்களில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதற்கு பாஜகவினர் கடுமையாக பதில் அளித்து வருகின்றனர். ட்விட்டரில் அவர், "The SOUTH!" (தி சவுத்) என்று சுருக்கமாக போட்ட பதிவு பாஜகவினரை சீண்டிவிட்டது.
அவரது கருத்துக்கு பதிலளித்த பாஜகவின் பழங்குடியினர் பிரிவின் தேசியப் பொறுப்பாளர் தவல் படேல், “தென்னிந்தியாவில் பாஜகவுக்கு 30 எம்.பி.க்கள் உள்ளனர். காங்கிரஸுக்கு 29 எம்.பி.க்கள் தான் உள்ளனர். இந்தியாவை பிளவுபடுத்தி, தென்னிந்தியா பாஜகவுக்கு எதிரானது என்ற கதையை கட்டமைக்கும் பித்து இந்த நபருக்கு உள்ளது" என்று கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தியும், "தெற்கு - வடக்கு இடையேயான வித்தியாசம் தெளிவாகத் தெரிகிறது!" என்று ட்விட்டரில் பதிவிட்டார்.
இதற்கு பதிலளித்துள்ள பாஜக எம்.பி. ஸ்மிருதி இரானி, “மதம் மற்றும் சாதியை மக்களை பிரிக்கப் பயன்படுத்திய அவர்கள், இப்போது புவியியல் ரீதியாக பிரிக்கப் பார்க்கிறார்கள். 'காங்கிரஸ் இல்லாத பாரதம்' என்று பாஜக கூறும்போது, இந்த வகையான பிரிவினைவாத அரசியலைத்தான் ஒழிக்க விரும்புகிறோம்" என்று அவர்கள் தெரிவித்துள்ளார்.
“தெற்கில் ஒரு மாநிலத்தில் தோல்வியை எதிர்கொண்டாலும், பாஜக இதுபோன்ற பிரிவினைவாத கருத்தை வெளியிடவில்லை. இதுதான் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் உள்ள வித்தியாசம். அவர்கள் (காங்கிரஸ்) வாக்காளரையும் நாட்டையும் பிளவுபடுத்துகிறார்கள்” என்றும் அவர் சாடியுள்ளார்.