BJP has won 3 civic bodies in Delhi

டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 270 வார்டுகளில் 185 இடங்களைக் கைப்பற்றிபாரதியஜனதா அமோக வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி 44 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 30 இடங்களில் மட்டுமே வென்றன.

பலத்த பாதுகாப்பு

டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 272 வார்டுகள் உள்ளன. நாட்டின் தலைநகர் என்பதால், டெல்லி மாநகராட்சியை கைப்பற்றுவதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. தேர்தலையொட்டி, இந்த 3 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கடந்த 23-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதையொட்டி மொத்தம் 13 ஆயிரத்து 22 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மாலை வரை நடந்த வாக்குப்பதிவில் 54 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

டெல்லியில் உள்ள வடக்கு மாநகராட்சி, கிழக்கு டெல்லி மாநகராட்சி, மற்றும் தெற்கு டெல்லி மாநகராட்சிக்கான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் 104 வார்டுகளைக் கொண்ட வடக்கு டெல்லி மாநகராட்சியில் பா.ஜனதா கட்சி 65 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றது. தனிப்பெரும்பான்மைக்கு 53 இடங்கள் தேவைப்படும் நிலையில், அந்த கட்சிக்கு 65 இடங்கள் கிடைத்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சி 20 வார்டுகளை கைப்பற்றி 2-வது இடத்தையும், காங்கிரஸ் கட்சி 15 வார்டுகளில்வென்று 3-வது இடத்தையும் பிடித்தது.

இதேபோல தெற்கு டெல்லி மாநகராட்சியில் 104 வார்டுகள் உள்ளன. இதில் பா.ஜனதா 71 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. ஆம் ஆத்மி கட்சி 15 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 12 வார்டுகளிலும் வென்றன.

64 வார்டுகளைக் கொண்ட கிழக்கு டெல்லியில் 33 வார்டுகளை வென்றாலே போதுமானது. பா.ஜனதா கட்சி 49 வார்டுகளில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. ஆம் ஆத்மி கட்சி 9வார்டுகளையும், காங்கிரஸ் கட்சி 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.

டெல்லி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 272 வார்டுகளில் 2 இடங்கள் தவிர நடத்தப்பட்ட தேர்தலில் 185 வார்டுகளைக் கைப்பற்றி பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. இந்த மகத்தான வெற்றியை சட்டீஸ்கர் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்களால்சுட்டுக்கொல்லப்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு அர்ப்பணிப்தாக பா.ஜனதா கட்சி தெரிவித்தது.

பாக்ஸ் மேட்டர்....

கொண்டாட்டம் இல்லை

இது குறித்து டெல்லி பா.ஜனதா தலைவர் மனோஜ் திவாரி கூறுகையில், “ சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்ட 25 துணை ராணுவப்படையினரின் சோகம்தான் மனதில் நிறைந்துள்ளது. ஆதலால், இந்த வெற்றியை நாங்கள் கொண்டாடப்போவது இல்லை. இதை வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு சமர்பிக்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.