நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், பிரதமர் மோடி மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கினார். ராகுல் பேசிய உரை பாஜகவினரை கலங்கடிக்க வைத்துள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். ரஃபேல் ஒப்பந்தம் முதல் நாட்டின் பல்வேறு அடிப்படை பிரச்னைகள் குறித்து பேசினார் ராகுல்.

அவர் பேசும்போது;  பிரதமர் மோடி அவ்வப்போது வெளிநாடுகளுக்கு செல்கிறார் என்பதை இந்தியில் "பிஎம் பஹார் மெயின் ஜாதே ஹைன்" என்று கூறினார். அப்போது வாய்  தவறி பஹார்  என்பதற்கு பதிலாக பார் என கூறிவிட்டார். இதனால் அவையில் சிரிப்பலையால் அதிர்ந்தது. எனினும் தனது வார்த்தையை ராகுல் சரி செய்து கொண்டு தொடர்ந்து பேசினார். அப்போது  மோடி சிரித்தபடியே இருந்தார்.

இதனைத் தொடர்ந்து ராகுலின் பேச்சுக்கு, பாஜக எம்.பி-க்கள் பலர் கூச்சலிட்டனர். தனது உரையின் முடிவில் ராகுல், 'நீங்கள் என்னை பப்பு என்றழைக்கலாம். ஆனால், உங்கள் மீது எனக்கு எந்த வித வெறுப்பும் இல்லை. இது தான் ஒரு இந்துவாக இருப்பது என்று நான் கூறுவேன்' என்று சொல்லி, பிரதமர் மோடியின் இருக்கைக்கு வந்து அவரை ஆரக்கட்டித் தழுவினார். இதையடுத்து பாஜக தரப்பு, ராகுல் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தது.