மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பெயர் போனவர். மேலும் மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க வேண்டும் என வலுவாக கருத்து கூறி வருபவர் கிரிராஜ் சிங். அவர் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: என்னுடைய அரசியல் வாழ்க்கையில், ராமர் கோயில் கட்டுவது மற்றும் மக்கள் தொகை கட்டுப்படுத்துவது ஆகியவை எனது 2 முக்கியமான இலக்குகள். 

என்னுடைய இலக்குகளில் ஒன்றான ராமர் கோயில் கட்டுவது இறுதி கட்டத்துக்கு நெருங்கி விட்டது. அதனால் என்னை போன்ற மக்கள் ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது. மக்கள் தொகையை கட்டுபடுத்துவதற்கான ஒரு சட்டத்தை அமல்படுத்திய பிறகு நான் அரசியலிருந்து ஓய்வு பெற்று விடுவேன். இவ்வாறு அவர் கூறினார். 67 வயதான கிரிராஜ் சிங், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, கடந்த மாதம் நடைபெற்ற விழிப்புணர்வு யாத்திரையில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

75 வயதுக்கு மேற்பட்ட தலைவர்கள் தேர்தலில் நிற்க சீட் வழங்க கூடாது என்பதை பா.ஜ.க. கொள்கையாக வைத்துள்ளது. கிரிராஜ் சிங்குக்கு அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருந்தாலும் அவர் அரசியலிருந்து ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.