காவிரி விவகாரம்: கர்நாடக மக்கள் நலனில் ஒருபோதும் சமரசம் கிடையாது - மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!
காவிரி விவகாரத்தில் கர்நாடக மக்களின் நலன்களில் சமரசம் செய்யப்படுவதை பாஜகவும் நானும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்
தமிழகத்துக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே காவிரி நதி நீர் தொடர்பான பிரச்சினை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் இருந்து 2023 ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை தமிழ்நாட்டுக்கு 40.4 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர வேண்டிய நிலையில், 11.6 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. இதனால், காவிரி டெல்டா பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் எல்லாம் உலர்ந்து போய்விடும் சூழல் உள்ளதால், தண்ணீரை திறந்து விடக் கோரினாலும், அதற்கு கர்நாக அரசு செவி மடுக்க மறுக்கிறது.
இதனிடையே, காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்னைகளை களைவதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் அண்மையில் டெல்லியில் நடந்தது. அந்த கூட்டத்திலும் தமிழகத்தின் கோரிக்கையை கர்நாடகா நிராகரித்தது. தொடர்ந்து, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கண்டிப்பான உத்தரவையடுத்து, காவிரி ஆற்றில் இருந்து 10 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு கர்நாடக அரசு திறந்து விட்டது. இதற்கு அம்மாநில பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதேசமயம், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், இதுதொடர்பாக விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. இருப்பினும், தமிழகத்துக்கு தண்ணீரை திறந்து விட முடியாது எனவும், குறைவான நீரையே திறந்து விடுவோம் எனவும் கர்நாடகம் விடாப்படியாக உள்ளது.
26 விரல்களுடன் பிறந்த பெண் குழந்தை.. லக்ஷ்மி தேவியின் அவதாரம் என குடும்பத்தினர் மகிழ்ச்சி..
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என அம்மாநில பாஜகவினர் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்ர்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்திருந்தார். இதில், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கலந்து கொண்டார்.
இவர், இதற்கு முன்னர் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா தண்ணீர் திறந்து விட்டபோது கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர். மேலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்காமல் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான டி.கே.சிவக்குமார் தமிழகத்துக்கு 10 டி.எம்.சி., நீரை காவிரியில் இருந்து திறந்து விட்டதாக கடும் எதிர்ப்பும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்ர்சிக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கலந்து கொண்டார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கர்நாடகா முதல்வர் அழைத்த காவிரி பிரச்சனை கூட்டத்தில் கலந்து கொண்டேன். எனது தலையீட்டை தொடர்ந்து முதல்வரும், துணை முதல்வரும் ஒருதலைப்பட்சமாக முடிவெடுப்பதற்குப் பதிலாக ‘அனைத்து கட்சிகளையும்’ கலந்தாலோசிக்க முடிவு செய்ததற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். உறுதியாக இருங்கள், காங்கிரஸ்-திமுகவின் இந்தியா கூட்டணிக்காக கர்நாடக மக்களின் நலன்களில் சமரசம் செய்யப்படுவதை கர்நாடக பாஜகவும், நானும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.” என பதிவிட்டுள்ளார்.