மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் காரசாரமாக நடைபெற்று வருகிறது. விவாதம் முடிந்த பின்னர் மாலை 6 மணிக்கு தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடைபெறும் என மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார். 

நம்பிக்கையில்லா தீர்மானம் தொடங்கியதுமே பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த 19 எம்.பி.க்கள் வெளியேறினர். ஆகையால் பிஜு ஜனதா தளம் வாக்கெடுப்பில் பங்கேற்கபோவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. இது பாஜகவிற்கே சாதகமாகும். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெற முடியும் என்பது மட்டுமின்றி, வாக்கு வித்தியாசமும் அதிகரிக்கும் என்பதால் பாஜகவுக்கு இது நன்மையாகவே கருப்படுகிறது. 

இந்நிலையில் தேசிய ஜனநாய கூட்டணியில் இடம் பெற்றிருந்த சிவசேனா கட்சி விவாதத்தில் பங்கேற்கவில்லை. அவர்கள் இன்று அவைக்கே வரவில்லை.சிவசேனா கட்சி நடுநிலையோடு இருப்பதால் வாக்கெடுப்பில் பங்கேற்பது சந்தேகம் தான்.

அதேபோல் பாமக உறுப்பினர் அன்புமணியும் பங்கேற்கவில்லை. அதிமுக விவாதத்தில் பங்கேற்றுள்ளது. ஆனால் வாக்கெடுப்பு நேரத்தில் அதிமுக வெளிநடப்பு செய்ய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.