விபத்தில் பலியான ஒருவரது உடலை கால்வாயில் வீசிய பீகார் போலீஸ்காரர்கள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
விபத்தில் பலியான ஒருவரின் உடலை பீகார் போலீசார் கால்வாயில் வீசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள ஃபகுலி பகுதியில் உள்ள தோதி கால்வாய் பாலம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த வீடியோவில், மூன்று போலீசார் இணைந்து ஒருவரது சடலத்தை இழுத்துச் செல்வதை காணலாம். உயிரிழந்த ஒருவரின் இரத்தம் தோய்ந்த உடலை இரண்டு போலீஸ்காரர்கள் இழுத்துச் செல்கின்றனர். பின்னர், மூன்றாவது போலீஸ்காரர் ஒருவர் உதவி செய்ய, மூன்று போலீஸ்காரர்களும் அந்த சடலத்தை கால்வாயில் வீசும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.
சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோ, இறந்த ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியது குறித்து கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், விபத்தில் பலியான ஒருவரது உடலை கால்வாயில் வீசிய பீகார் போலீஸ்காரர்கள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய ஃபகுலி ஓபி காவல் அதிகாரி மோகன் குமார், “லாரியில் அடிபட்ட விபத்தில் முதியவர் ஒருவர் பலியானார். உயிரிழந்தவரின் சில உடல் பாகங்கள் மற்றும் உடைகள் சாலையில் சிக்கியுள்ளன. பிரேத பரிசோதனைக்காக அவற்றை மீட்க முடியவில்லை.” என்றார். ஆனால், சில பாகங்கள் சேகரிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும், மீதமுள்ளவை கால்வாயில் வீசப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
ஐந்து மாநில தேர்தல்: இன்று கூடும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்!
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, முசாபர்பூர் காவல்துறை அறிக்கையை வெளியிட்டது. அதில், தகவல் அறிந்ததும் விபத்து நடந்த இடத்திற்கு வந்த போலீசார், பலியானவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், வைரலான வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் உறுதியளித்திருந்தனர்.
இதனிடையே, கால்வாயில் வீசப்பட்ட உடலை மீட்டு போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய போலீஸ்காரர்கள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
