இரு இந்திய வீரர்களை கொன்று உடல்களை சிதைத்த பாகிஸ்தானை பழிக்குப் பழி வாங்குவோம் என்றும், அந்நாட்டுக்கு  உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும்  ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகாதி எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென ராக்கெட்டுகளை வீசியும் தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.

இந்திய பகுதிக்குள் சுமார் 250 மீட்டர் தூரம் வரை உள்ளே நுழைந்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், இந்திய ராணுவ இளநிலை அதிகாரி பரம்ஜீத் சிங், எல்லை பாதுகாப்பு படையின் தலைமை காவலர் பிரேம் சிங் ஆகியோர் வீர  மரணம் அடைந்தனர். அவர்களின் உடல்களை கைப்பற்றிய பாகிஸ்தான் ராணுவத்தினர் இருவரின் தலையை துண்டித்ததுடன், உடல்களை சிதைத்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ தளபதி பிபின் ராவத் இந்திய வீரர்களை கொன்று சிதைத்த பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  எதிர்காலத்தில் எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகள் குறித்து தற்போது கூற முடியாது என தெரிவித்தார்.

தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ளதால்  பனி உருக துவங்கியுள்ளது. இதனை பயன்படுத்தி வழக்கம்போல், பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்வார்கள். இதனை தடுக்க நடவடிக்கை கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.