பாத யாத்திரைக்கு புல்லட் காரா? மத்திய அரசுக்கு ராகுல் பதிலடி
மத்திய அரசு தனது இந்திய ஒற்றுமைப் பயணம் என்ற நடை பயணத்தை புல்லட் ப்ரூஃப் காரில் நடத்தச் சொல்கிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் டிசம்பர் 24ஆம் தேதி டெல்லியை எட்டியது. பேரணி டெல்லிக்குள் நுழைந்ததும் பல இடங்ககளில் ராகுல் காந்திக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சி தரப்பில் மத்திய அரசு மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கு சிஆர்பிஎப் தரப்பில் பதிலளித்த பதிலில், ராகுல் காந்தியின் பாதுகாப்பில் எந்த குறைபாடு நேரவில்லை என்றும் ராகுல் காந்திதான் அவ்வப்போது பாதுகாப்பு விதிகளை மீறியிருக்கிறார் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "மத்திய அரசு என்னை குண்டு துளைக்காத காரில் இந்திய ஒன்றுமைப் பயணத்தை தநடத்தச் சொல்கிறது. நடை பயணத்தில் அதை எப்படிச் செய்யமுடியும்?" கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் குண்டு துறைக்காத காரைத் தவிர்த்த சந்தர்ப்பங்களையும் ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார்.
"பாஜக தலைவர்கள் திறந்தநிலையில் உள்ள ஜீப்பில் பேரணிகள் நடத்தியபோது யாரும் நோட்டீஸ் அனுப்பவில்லை. ராகுல் காந்திதான் தனது பாதுகாப்புக்காக விதிக்கப்பட்ட விதிகளையே மீறுகிறார் என்ற மனப்பதிவைக் மக்களிடம் ஏற்படுத்த முயல்கிறார்கள்" என்றும் ராகுல் கூறினார்.
பாத யாத்திரைதான் இந்தியாவின் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கிறது எனவும் இப்பயணத்தின் மூலம் தான் பலவற்றைக் கற்றுக்கொண்டதாகவும் ராகுல் தெரிவித்தார்.