மாணவர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை தர வேண்டும் என பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்று கேட்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அவ்வப்போது அதிர்ச்சிகர சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. வாடகைக்கு வீடு கிடைப்பது சிரமமாக உள்ளதாகவும், பள்ளிப் படிப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுக்காததால் ஒருவருக்கு வீடு வாடகைக்கு கிடைக்கவில்லை என்ற செய்தி அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மாணவர்களின் சம்பளத்தில் 2.1 சதவீத தொகையை தர வேண்டும் என பெங்களூருவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று கேட்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக விவாத வலைதளமான Redditஇல் PurpleRageX என்கிற பயணாளி இந்த தகவலை பதிவிட்டுள்ளார். அதில், கல்லூரியில் உள்ள வேலைவாய்ப்பு பிரிவு கட்டணமாக, மாணவர்கள் ஒரு நிறுவனத்தில் தேர்வானவுடன், அவர்களின் சம்பளத்தில் 2.1 சதவீத தொகையை தர வேண்டும் என நிர்பந்திப்பதாகவும், அதுவரை அவர்களது சான்றிதழ்களை தராமல் கல்லூரி நிர்வாகம் நிறுத்தி வைத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுபோன்று கட்டணம் செலுத்த வேண்டும் என அதிகாரப்பூர்வ ஆவணமோ அல்லது சுற்றறிக்கையோ கல்லூரியால் வழங்கப்படவில்லை எனவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் செலுத்தும்படி, வாய்மொழியாக மட்டுமே கூறி வற்புறுத்துகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ள அந்த மாணவர், நான் இப்போதுதான் பட்டம் பெற்றேன். இன்னும் சம்பாதிக்கவேயில்லை. ஆனால், ஆண்டு சம்பளத்தில் 2.1 சதவீத தொகையை செலுத்த வேண்டும் என கல்லூரி நிர்வாகம் கூறுவதாக தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதத்தில் கொட்டும் மழை.. எல் நினோ விளைவு.. அன்றே கணித்த அமெரிக்கா.! ஆய்வாளர்கள் பகீர் - என்ன காரணம்?

மேலும், பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்ட தனது சீனியர்களையும் கல்லூரி நிர்வாகம் இதேபோல் வற்புறுத்தியதாகவும் அந்த மாணவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால், அந்த பதிவில் கல்லூரியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ள மற்றொரு பயணாளர், தாம் அதே கல்லூரியில் பட்டம் பெற்றதாகவும், வேலையில் சேராமலேயே வேலை வாய்ப்பு பயிற்சிக் கட்டணம் என்ற பெயரில் கட்டணம் செலுத்த செல்லி கல்லூரி நிர்வாகம் வற்புறுத்தியதாக பதிவிட்டுள்ளார்.