சீனாவில் உருவான கொரோனா, தற்போது உலகம் முழுதும் அதிவேகமாக பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக திகழ்ந்துவருகிறது. சீனா, இத்தாலி, ஸ்பெய்ன், ஈரான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் இதுவரை 270க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. 

கொரோனா வைரஸ் நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களுக்கு கொரோனா வைரஸை கண்டறிவது முதற்கட்டம். அவர்களிடமிருந்து அவர்களது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரவுவது இரண்டாவது கட்டம். அவர்களிடமிருந்து பொது சமூகத்திற்கு பரவுவது மூன்றாவது கட்டம். அப்படி பொதுச்சமூகத்திற்கு பரவிவிட்டால், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படக்கூடும். இதில் நாம் இப்போது இரண்டாவது கட்டத்தில் இருப்பதால், தற்காத்துக்கொண்டால், கொரோனாவிலிருந்து தப்பிக்கலாம்.

எனவே இரண்டாவது கட்டத்தில் இருக்கும் இந்தியா, இதிலேயே கொரோனாவை விரட்டுவதுதான் மேலும் பரவாமல் தடுப்பதற்கான ஒரே வழி. அதனால் இது முக்கியமான காலக்கட்டம். மக்கள், கைகளை கழுவி சுத்தமாக இருப்பதுடன், கைகளை கண்கள், மூக்கு, காதுகளில் வைத்துவிடாமல் இருக்க வேண்டும். இவையனைத்தையும் மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இல்லாமல் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.

22ம் தேதி(நாளை - ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள், கொரோனாவை எதிர்கொள்ளும் விதமாக மக்கள் சுய ஊரடங்கை பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். 

அரசு துறைகள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களையும் இங்கேயே இருப்பவர்களையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றன. 

இந்நிலையில், கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் ஸ்பெய்னில் கல்லூரி படிப்பை படித்துவரும், மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியை சேர்ந்த ஒரு பெண், ஸ்பெய்ன்லிருந்து இந்தியாவிற்கு வந்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

ஆனால் அந்த இளம்பெண், அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி தன்னை தனிமைப்படுத்தி கொள்ளாமல், தனது நாயை அழைத்துக்கொண்டு, அந்த ஏரியாவில் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். இதைக்கண்ட அப்பகுதி வாசிகள், அந்த ஏரியா கவுன்சிலான சங்கர் கோஷுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து அந்த பெண்ணுக்கு, தனிமைப்படுத்தலின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காகவும், எச்சரிப்பதற்காகவும் சுகாதாரத்துறை மற்றும் சில துறைகளை சேர்ந்த அதிகாரிகள், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்களை கொஞ்சம் கூட மதிக்காமல், அந்த பெண்ணும் பெண்ணின் குடும்பத்தினரும் திட்டி அனுப்பியுள்ளனர். 

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தன்னை தனிமைப்படுத்தி கொள்ள மறுத்ததுடன், அதிகாரிகளை வசைபாடியதற்கும் தக்க நடவடிக்கை எடுக்குமாறு, மேலதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளதாக அந்த கவுன்சிலர் கோஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவாமல் தடுப்பது, அரசாங்கத்தின் கையில் மட்டும் இல்லை.. ஒவ்வொரு குடிமகனின் கையிலும் இருக்கிறது. அரசாங்கத்தின் அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் அலட்சியப்படுத்தாமல் பின்பற்றினால்தான் கொரோனாவிலிருந்து விடுபடமுடியும் என்பதை உணர்ந்து, பொதுமக்கள் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடாமல் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இது எந்த தனிமனிதர் சார்ந்த விஷயம் மட்டுமல்ல.. சமூகம் சார்ந்த பிரச்னை. எனவே யாருக்கும் நம்மாலோ அல்லது யார் மூலமும் நமக்கோ எந்த பிரச்னையும் ஏற்படாத வண்ணம் தனிமைப்படுத்திகொள்வது அவசியம்.