விவசாயிகளுக்கு ரூ.6000 கிடைப்பதில் சிக்கல்: என்ன காரணம்?
விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளில் ஏராளமான விவசாயிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டம் (PM KISAN - பி.எம் கிசான் சம்மான் நிதி) 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, 4 மாதங்களுக்கு ஒருமுறை 2 ஆயிரம் ரூபாய் என ஆண்டிற்கு ரூ.6,000 விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் 10.09 கோடி விவசாயிகள் இதில் பயன் பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் ஏராளமான விவசாயிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவோரின் எண்ணிக்கை சுமார் 63 சதவீதமாக குறைந்துள்ளது.
இதுகுறித்த புள்ளிவிவரங்களின்படி, பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 23,01,313 ஆக இருந்து. இந்த எண்ணிக்கையானது 2023ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 8,53,960 ஆகக் குறைந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகள் அல்லது KYC சரிபார்ப்பு செய்யாதது உள்ளிட்ட காரணங்களால் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், 5,41,512 விவசாயப் பயனாளிகள் நீக்கப்பட்டனர். இத்திட்டத்தில் வகுத்துள்ள விதிமுறைகளின்படி விவசாயிகள் தங்களின் சான்றுகளை சரியாக சமர்ப்பிக்காததால், மத்திய அரசால் அவர்கள் நிராகரிக்கப்பட்டனர்.
இதுகுறித்து விவசாயிகளின் தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் கூறுகையில், “பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6000 நிதியுதவி பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. கணினி படிப்பறிவு இல்லாத விவசாயிகள் ஆன்லைனில் தங்கள் சான்றுகளை பதிவேற்றம் செய்ய முடியாமல் நிராகரிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு இந்த உதவி மிகவும் தேவைப்படுகிறது.”என்றார். மேலும், கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவி செய்வதில் மட்டுமே மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உலகளவிய சக்தியாக இந்தியா உருவெடுத்தது எப்படி?
பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் 17.59 லட்சம் பயனாளிகள் தலா ரூ.2,000 வீதம் 12 தவணைகள் வரை பெற்றுள்ளனர். இருப்பினும், 13 மற்றும் 14 வது தவணை விநியோகிக்கப்படுவதற்கு முன்பு, பதிவுசெய்யப்பட்ட பயனாளிகளில் பலர் தகுதியற்றவர்கள் என கூறி அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. விதிமுறைகளை பூர்த்தி செய்யாதது அல்லது KYC-ஐ பதிவேற்றத் தவறியதற்காக அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலே பயனாளிகளின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், டிசம்பர் 2021 - மார்ச் 2022க்கான தவணை விநியோகிக்கப்படும் போதுதான் பயனாளிகளின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் வேளாண்மை இயக்குனர் குர்விந்தர் சிங் கூறுகையில், “விவசாயிகள் தங்கள் KYC-யை ஆன்லைனில் பதிவேற்ற தவறியதால் அல்லது வங்கிக் கணக்குகளுடன் தங்கள் ஆதாரை இணைக்க முடியாமல் போனதால் பயனாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார். மேலும், பெரிய அளவில் விவசாயம் செய்யும் விவசாயிகள் என்பதாலும் சிலரது பெயர்கள் நீக்கப்பட்டிருக்கலாம். ஆனால் உண்மையான விவசாய பயனாளிகளுக்கு அவர்களின் தரவுகளை சேகரித்து பதிவேற்றம் செய்வதன் மூலம் அவர்களுக்கு உதவ அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது போன்று மற்ற மாநிலங்களில் சிலரது பெயர்கள் நீக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. எனவே, KYC விவரங்கள் அப்டேட் செய்வது, வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு உள்ளிட்ட இத்திட்டத்துக்கான விதிமுறைகளை பூர்த்தி செய்யுமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.