Banks are not responsible for jewelry theft in locker shock by reserve bank

வங்கிகளில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில்(லாக்கரில்) வாடிக்கையாளர்கள் வைக்கும் நகைகள், விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளை போனால், அதற்கு வங்கிகள் பொறுப்பு ஏற்காது. எந்த விதமான இழப்பீடும் வழங்காது என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

வழக்கறிஞர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனுவுக்கு ரிசர்வ்வங்கியும், 19 அரசு வங்கிகளும் இந்த பதிலை அளித்துள்ளன.

வங்கியில் உள்ள லாக்கரில் வாடிக்கையாளர்கள் வைக்கப்படும் நகைகளுக்கு யார் பொறுப்பு?, திருடு, கொள்ளை போனால் இழப்பீடு யாரிடம் இருந்து பெறுவது? என்பது குறித்து வழக்கறிஞர்குஷ் கல்ரா என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மனுச் செய்திருந்தார்.

இதற்கு சமீபத்தில் ரிசர்வ் வங்கி அளித்த பதில் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அரசு வங்கிகளின் லாக்கரில் வாடிக்கையாளர்கள் தங்கள் விலை உயர்ந்த பொருட்களை வைக்கும் போது, அது திருடுபோனால், அதற்கு வங்கிகள் பொறுப்பு ஏற்காது, இழப்பீடும் வழங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேங்க் ஆப் இந்தியா, ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், பஞ்சாப் நேஷனல் பேங்க், யு.சி.ஓ., கனராபேங்க் உள்ளிட்ட 19 வங்கிகள், ரிசர்வ் வங்கி அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது-

வங்கிக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான உறவு, அவர்கள் பயன்படுத்தும்லாக்கருக்கும் உறவு என்பது நிலம் வைத்திருப்பவர்களுக்கும், அதை வாடகைக்கு எடுத்து பயன்படுத்துபவர்களுக்கும் இடையிலான உறவு போன்றது.

வங்கி லாக்கரை பயன்படுத்தி, அதில் மதிப்பு மிக்க பொருட்கள், நகைகளை வைக்கும் வாடிக்கையாளர்களே அதற்கான பொறுப்பாவார்கள். வங்கிகளுக்கும் அதில் தொடர்பில்லை.

வங்கி லாக்கரை வாடகைக்கு பெறும்போது, வாடிக்கையாளர்களின் ஒப்பந்தத்தில் இது குறித்து தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. லாக்கரில் வைக்கப்படும் நகைகள் திருடப்பட்டாலோ, கொள்ளை போனாலோ அதற்கு வாடிக்கையாளர்கள்தான் பொறுப்பாவார்கள். இங்கு நகைகளை வைப்பது என்பது வாடிக்கையாளர்களின் விருப்பதைத் பொறுத்தது.

மேலும், வங்கி லாக்கரில் வாடிக்கையாளர்கள் வைக்கும் நகைகள், மதிப்பு மிக்க பொருட்களுக்கு ஏற்படும் சேதம், இழப்புக்கு வங்கிகள் ஒருபோதும் பொறுப்பு ஏற்காது.அதாவது, நாட்டில் போர் ஏற்படும் ஏற்படும் சேதம்,திருட்டு, கொள்ளை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, இயற்கை பேரிடர் ஆகியவை நடக்கும் போது, அதில் நகைகள் சேதமடைந்தாலோ, காணமல் போனாலோ அதற்கு வங்கிகள் பொறுப்பு ஏற்காது. இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்திய போட்டி ஆணையத்திடம்(சி.சி.ஐ.) வழக்கறிஞர் குஷ் கல்ரா முறையீடு செய்துள்ளார். அதில், “ வங்கிகள் அனைத்தும் கூட்டாக இணைந்து கொண்டு லாபநோக்கத்துக்காக செயல்படுகின்றன.

சந்தையில் போட்டி விதிமுறைகளுக்கு மாறாக நடக்கின்றன. வங்கியில் லாக்கருக்கு வாடகை கொடுத்தும், அந்த நகைகள் காணாமல் போனால் வாடிக்கையாளர்கள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றால், அந்த நகைகளை காப்பீடு செய்து, வாடிக்கையாளர்களே ஏன் வீட்டில் வைத்துக்கொள்ளக்கூடாது. சந்தை போட்டிச் சட்டத்தில் கீழ் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.