கடந்த நவம்பர் 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. பின்னர், கையில் இருப்பு உள்ள பணத்தை, பொதுமக்கள் தங்களது வங்கி கணக்கில் செலுத்தி, புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை பெற்று கொள்ளலாம் என அறிவித்தது.

மேலும், வங்கிகளில் பண பரிமாற்றம் செய்யும்போது, ஒரு நாளைக்கு ரூ.2000 மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஏடிஎம்களில் ரூ.2,500 எடுக்கலாம் என கூறப்பட்டது. பின்னர், இந்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, ஏடிஎம்களில் ரூ.4,500, ரூ.10,000 எனவும், வங்கியில் வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் எடுப்பதற்கு கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது.

இதற்கிடையில் பணம் மாற்றுவதற்காக மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். தினமும் அதிகாலையிலேயே வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதில், பல ஏடிஎம் மையங்கள் மூடியே கிடந்தன. சில ஏடிஎம் மையங்களில் மட்டும் பணம் கிடைத்தது. ஆனால், அந்த பணமும் போதுமானதாக இல்லை.

இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வேலைக்கு செல்வோர், கடும் சிரமம் அடைந்தனர். குறிப்பாக, ஏடிஎம் மற்றும் வங்கியில் பெற்ற 2000 ரூபாய் நோட்டை மாற்றுவதில், பொதுமக்கள் கடும் சோதனையை அனுபவித்தனர். இதற்காக கடை கடையார் ஏறி இறங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஏடிஎம் மையத்தில் ரூ.25 ஆயிரம் வரை எடுக்கலாம் என கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. இதையொட்டி இன்று முதல் வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, ரூ.50 வரை எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.