கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக மத்திய நிதியமைச்சகம் உறுதி அளித்ததால், 26 மற்றும் 27ம் தேதிகள் நடத்த இருந்த வேலை நிறுத்தத்தை பொதுத்துறை வங்கிகள் அதிகாரிகள் சங்கங்கள் ஒத்திவைத்துள்ளன. 

அதனால் அந்த நாட்களில் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும்.மத்திய அரசு வங்கித்துறையில் பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வங்கிகளை இணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முதலில் ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளை இணைத்தது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக இணைக்கும் அறிவிப்பை வெளியிட்டது. 

இந்த வங்கி இணைப்பு நடவடிக்கை நிறைவு பெற்றவுடன் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12ஆக குறையும். 2017ல் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 27ஆக இருந்தது. மத்திய அரசின் வங்கிகள் இணைப்பு நடவடிக்கைக்கு வங்கி யூனியன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. வங்கிகள் இணைப்பு நடவடிக்கையால் பணியாளர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என யூனியன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், செப்டம்பர் 26 மற்றும் 27ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஏ.ஐ.பி.ஓ.சி., ஏ.ஐ.பி.ஓ.ஏ., ஐ.என்.பி.ஓ.சி. மற்றும் என்.ஓ.பி.ஓ. ஆகிய 4 வங்கி அதிகாரிகள் சங்கங்கள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தன.

இந்நிலையில், வங்கி யூனியன்களுடன் மத்திய நிதியமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் உடன்பாடு ஏற்பட்டதால் 2 நாள் வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பதாக வங்கி அதிகாரிகள் சங்கங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் சங்கங்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், அனைத்து வங்கிகளின் அடையாளத்தை பாதுகாப்பது உள்பட 10 வங்கிகளை இணைப்பால் எழும் பிரச்னைகளுக்கு தீர்வு காண ஒரு குழு அமைப்பதில் நிதியமைச்சக செயலாளர் ராஜீவ் குமார் சாதகமாக உள்ளார். 

மேலும், வேலைநிறுத்த அழைப்பை மறுபரிசீலனை செய்ய எங்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நிதி செயலாளரின் நேர்மறையான மற்றும் செயல்படக்கூடிய தீர்வை கருத்தில் கொண்டு 48 மணி நேர வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும். வங்கி பணியாளர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.