பெங்களூருவில் மேலும் ஒரு பெண்ணுக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்து உள்ளது. அந்தப் பெண்ணின் உதடு, நாக்கை கடித்துவிட்டு தப்பி ஓடிய வாலிபர் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புத்தாண்டு கொண்டாட்டம்

பெங்களூரு, எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோட்டில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மர்ம நபர்கள் சிலர், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடுமைகள் அரங்கேறின.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தாமாக முன்வந்து 6 வழக்குகளை பதிவு செய்து உள்ளனர்.

வீடியோ காட்சி

மேலும் புத்தாண்டு அன்று அதிகாலையில் கம்மன ஹள்ளி 5-வது மெயின் ரோட்டில் நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு நடுரோட்டில் வாலிபர்கள் பாலியல் தொல்லை கொடுத்தார்கள்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் இதுவரை கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஷாப்பிங் மால்

இந்த நிலையில், பெங்களூருவில் தொடரும் கொடுமையாக மேலும் ஒரு பெண்ணுக்கு நடுரோட்டில் ஒரு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்து உள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-

பெங்களூரு கே.ஜி.ஹள்ளி அருகே வசித்து வருபவர் கீர்த்திகா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர், பெங்களூருவில் தனியார் நடத்தும் ஷாப்பிங் மாலில் ஊழியராக பணியாற்றி வருகிறார். அதிகாலையில் அவர் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றார். 

பாலியல் தொல்லை

எஸ்.பி.ஆர். லே அவுட் பகுதியில், கீர்த்திகாவை பின் தொடர்ந்து ஒரு மர்ம வாலிபர் வந்தார். சுவட்டர் மற்றும் குல்லா அணிந்து இருந்த அந்த வாலிபர் திடீரென்று கார்த்திகா அருகில் வந்து அவரை கட்டிப்பிடித்தார்.

பின்பு அவர் கார்த்திகாவின் உதட்டையும் நாக்கையும் கடித்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

காயம்

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அந்தப்பகுதியில் வசிப்பவர்கள் ஓடி வந்தார்கள்.

இதனால் அந்த மர்ம வாலிபர், அவரை தாக்கியதுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மர்ம வாலிபர் தாக்கியதிலும், கடித்ததிலும் கீர்த்திகாவின் முகம், கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது.

கண்காணிப்பு ேகமரா

இந்த சம்பவங்கள் பற்றி கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் போலீசாரிடம் வழங்கப்பட்டது.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.