பெங்களூரு நகரில் கடந்த 1ம் தேதி இரவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டார். அந்த செயலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார், கண்காணிப்பு கேமிரா உதவியுடன் நேற்று கைது செய்தனர்.

புத்தாண்டு கொண்டாட்டம்

 பெங்களூரு  கம்மனஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் அனிதா(வயது 23, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், கடந்த டிசம்பர் மாதம் 31–ந் தேதி புத்தாண்டை கொண்டாட தனது தோழிகளுடன் வெளியே சென்று இருந்தார். புத்தாண்டை கொண்டாடிவிட்டு அதிகாலை 2.30 மணியளவில் அவர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

பாலியல் தொல்லை

அப்போது அங்கு பைக்கில் வந்த 2 மர்மநபர்கள் அனிதாவை கேலி, கிண்டல் செய்து, அனிதாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கடத்திச் செல்லவும் முயன்றனர். அந்த பெண் கடுமையாகப் போராடி கூச்சல் போடவே, அவரை அங்கிருந்து விட்டுவிட்டு, தப்பிச் சென்றனர். இதுகுறித்து போலீசில் அனிதா புகார் எதுவும் கொடுக்கவில்லை.

கண்காணிப்பு கேமிரா

 இந்த நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் வசிக்கும் ஒருவரின் வீட்டின் முன்பக்க சுவரில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்புகேமராவில் மர்மநபர்கள் அனிதாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கடத்திச் செல்ல முயன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.

கைது

பின்னர் இதுபற்றி உடனடியாக அவர் அப்பகுதி போலீஸ் நிலையத்தில் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, அவரிடம் இருந்து பானசவாடி போலீசார் புகாரை பெற்றுக் கொண்டு

மர்மநபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்து உள்ளனர்.

பாக்ஸ்மேட்டர்...

நீண்டநாட்களாக பின்தொடர்ந்தனர்

இது குறித்து பெங்களூரு போலீஸ் ஆணையர் பிரவீண் சூத் கூறுகையில், “ பெண்ணை பாலியல் துன்புறுத்தல் ெசய்த செயலில் ஈடுபட்டவர்களில் முக்கியக் குற்றவாளி பெயர் அய்யப்பா. இவர் ஐ.டி.ஐ. மாணவர். மற்ற 3 பேர் பெயர் லினோ, சோம்சேகர், சுதேஷ், மேலும், 2 பேரைத் தேடி வருகிறோம். இந்த சம்பவம் நடப்பதற்கு சில நாட்களாக அந்த பெண்ணை இவர்கள் பின்தொடர்ந்துள்ளனர்.

அந்த பெண்ணின் வீட்டுக்கு அருகே தான் இவர்கள் குடியிருந்து வந்துள்ளனர். சம்பவத்தன்று அந்த பெண் தனியாக வருவதைப் பார்த்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். இந்த கைதுக்குப்பின் பாதிக்கப்கப்பட்ட பெண்ணிடம் பேசி வருகிறோம். அவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு தந்து வருகிறார். மேலும், இதேபோல் நகரில் நடந்த பல்வேறு சம்பவங்களில் போலீசாரே முன்வந்து 4 வழக்குகளை பதிவுசெய்துள்ளோம்''  என்றார்.