பிரதமர் நரேந்திர மோடியின் அரசுபோல மோசமான அரசை நான் பார்த்ததே இல்லை என திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம், மம்தா பானர்ஜி தெரிவித்ததாவது:- ரூபாய் நோட்டு தடை செய்யும் நடவடிக்கை மூலம் மத்திய அரசு நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இதில் தலையிட்டு மோடியிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.

இந்த தேசத்தை மீட்பதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும், தங்களிட்ம் வேறுபாடுகளை மறந்து இணைந்து போராடி வருகின்றன. அந்த நபரால் (மோடி) நாட்டுக்கு தலைமையேற்று வழிநடத்த முடியாது. அவர் கண்டிப்பாக பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும். அதற்குப் பதிலாக அத்வானி, அருண் ஜேட்லி அல்லது ராஜ்நாத் சிங் ஆகியோர் தலைமையில் தேசிய அரசை அமைக்க வேண்டும்.

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து குடியரசுத் தலைவர் பேசினார். அதனை நான் வரவேற்கிறேன்.

எதிர்க்கட்சிகளைப் பழி வாங்குவதில் மத்திய அரசுபோல மோசமான அரசை நான் பார்த்ததில்லை. மேற்கு வங்கத்தில் நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை மீட்க மாநில அரசு முயற்சித்து வருகிறது. ஆனால், அவற்றை மூடிவிட வேண்டுமென்று மத்திய அரசு நினைக்கிறது.

பல ஆண்டுகளாக இயங்கி வந்த திட்டக் குழு உள்பட அமைப்புகளை இப்போதைய மத்திய அரசு கலைத்துவிட்டது. அரசின் முதுகெலும்பையே உடைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் மேற்கு வங்க அரசுக்கு ரூ.5,500 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறி பாஜக ஆளும் மாநிலத்துக்கு நான் வந்தால் என்னை அடித்து விரட்டப்போவதாக அக்கட்சித் தலைவர் ஒருவர் அண்மையில் எனக்கு மிரட்டல் விடுத்துள்ளார். முதலில் அவர்களால் என்னைத் தொட முடியுமா என்று பார்க்கலாம்.

பாஜக ஆளும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் நிலத்தை மாநில அரசு அபகரித்தது குறித்து எங்கள் கட்சி எம்.பி.க்கள் விசாரித்து என்னிடம் அறிக்கை அளித்துள்ளனர். விரைவில் நான் ஜார்க்கண்ட் மாநிலத்துக்குச் செல்ல இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.