‘வீழ்வேனென்று நினைத்தாயோ!’ என்று மீசை முறுக்கி எழுந்து நிற்கிறது தி.மு.க. காரணம்?...2ஜி வழக்கு மற்றும் கலாநிதி, தயாநிதி சகோதரர்களுக்கு எதிரான வழக்கு என இரண்டிலும் சி.பி.ஐ. தோற்று சம்பந்தப்பட்டவர்களுக்கு விடுதலை கிடைத்திருப்பதுதான். 
இந்நிலையில் கே (கலாநிதி), டி (தயாநிதி) பிரதர்ஸின் விடுதலையை விமர்சித்து பல மட்டங்களில் இருந்து மிக வலுவான விமர்சனங்கள் வந்து விழுந்து கொண்டேயுள்ளன. குறிப்பாக பி.ஜே.பி.யின் மிக முக்கிய அதிகார மையமான ஆடிட்டர் குருமூர்த்தி இந்த வழக்கின் தீர்ப்பை ‘சி.பி.ஐ.க்கு நேர்ந்த மிகபெரிய அவமானம்’ என்று கொதித்திருக்கிறார். 

மாறன் சகோதரர்களுக்கு எதிரான ‘சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கு’ குறித்த நீதிமன்ற தீர்ப்பிலேயே அந்த வழக்கு குறித்த உண்மைகள் அடங்கியிருப்பதாக சொல்லியிருக்கிறார். கே.டி. சகோதரர்கள் இருவரும் முறைகேடுகள் செய்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையே! என்றும் கூறியிருக்கிறார். இவை குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி வெளியிட்டிருக்கும் விஷயங்களின் ஹைலைட் பாயிண்டுகள் இதோ...

*    தயாநிதி மாறன் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராஅக் இருந்த காலகட்டத்தில், 2007 ஜனவரி முதல் மே மாதம் வரை சென்னையில் போட் கிளப் ஹவுஸ் சாலை மற்றும் கோபாலபுரம் ஆகிய இடங்களில் உள்ள அவர்களின் வீடுகளில் மொத்தம் எழுநூற்று அறுபத்து நான்கு பி.எஸ்.என்.எல். அதி நவீன தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. 

*    இந்த இணைப்புகளானது சென்னை தொலைதொடர்புத் துறை முதன்மைப் பொது மேலாளர் என்ற பினாமி பெயரில் எடுக்கப்பட்டு மாறன் சகோதரர்களின் இல்லத்தில் பொருத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. 

*    மாறன் சகோதரர்களின் போட் ஹவுஸ் சாலை இல்லத்தில் கொடுக்கப்பட்ட இணைப்புகள் அனைத்தும் நிலத்தடி கேபிள்கள் மூலம் சன் டி.வி. நெட்வொர்க் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருந்தன.

*    இந்த இணைப்புகள் அனைத்தும் தொலை தொடர்புத்துறைக்கு அப்பாற்பட்டு இருந்ததால், பில்லிங் உள்ளிட்ட கணக்கு வழக்குகள் அனைத்தும் தனியாகவே நடைபெற்றன. இதனால் அந்த இணைப்புகள் அனைத்துக்குமான பயன்பாட்டுக் கட்டணம் எவ்வளவு என்பதே தெரியாமல் போய்விட்டது. 

*    பயன்பாட்டுக் கட்டனம் எவ்வளவு என்பது தெரியாமல் போனதால், 323 இணைப்புகளும் கொடுக்கப்பட்ட காலத்தை வைத்து, ஒரு யூனிட்டுக்கு எழுபது பைசா என்று கணக்கிட்டு நானூற்று நாற்பது கோடி ரூபாய் என்று சி.பி.ஐ. கூறியது. 

*    இதையெல்லாம் விட மோசமான ஒரு விஷயம் ஒன்று உண்டென்றால்...மேற்படி இணைப்புகளுக்கு பொருத்துதல் கட்டணமாக ஒன்று புள்ளி எழுபத்து ரெண்டு கோடி ரூபாயை பி.எஸ்.என்.எல். செலுத்தியிருக்கிறது. 

*    இந்த விவகாரமெல்லாம் வெளி வந்த காலம் 2007-ம் வருடம். இந்த சமயத்தில்தான் தமிழக முதல்வராக இருந்தவரும், தங்களின் தாத்தாவுமான கருணாநிதியுடன் மாறன் சகோதரர்களுக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. 

இந்த வழக்கை சென்னை சி.பி.ஐ. தீர விசாரித்து வந்தது. ஆனால் மாறன் பிரதர்ஸ் மற்றும் கருணாநிதி இடையே சமரசம் ஆனதன் பின் இந்த வழக்கு டெல்லி சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. 

* இதை எதிர்த்து நான் உச்சநீதிமன்றம் சென்றேன். அதன் பிறகுதான் சி.பி.ஐ. இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தது. ஆனால் மாறன் சகோதரர்களோ நீதிமன்றத்தை நாடி, இது ஒரு சிவில் வழக்கு என வாதிட்டனர். இழப்பு வெறும் ஒன்று புள்ளி எழுபத்து ரெண்டு கோடி ரூபாய்தான் என்றனர். இந்த சமயத்தில் உண்மையான இழப்பை சொல்லியிருக்க வேண்டிய சி.பி.ஐ. அதை செய்யவில்லை. உண்மையை சொன்னால் இந்த வழக்கில் நேர்மையாய் ஆர்வம் காட்டிய சி.பி.ஐ. அதிகாரி, அதிலிருந்து மாற்றப்பட்டார். இதன் பிறகு வழக்கில் சி.பி.ஐ. ஆர்வம் காட்டவில்லை. அதன் விளைவால் இன்று நீதிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. 

மொத்தத்தில் தங்களை நேர்மையானவர்கள்  என்று மாறன் சகோதரர்கள் மார் தட்டி கொள்ளும் நிலையை சி.பி.ஐ. உருவாக்கிவிட்டது!  இது மிகப்பெரிய அவமானம்!
...என போட்டுப் பொளந்திருக்கிறார்.