ஆந்திர மாநிலத்தை விட தமிழகம் மற்றும் கர்நாடாகவில் பெட்ரோல் லிட்டருக்கு 10ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் குறைவாக இருப்பதால் தமிழக எல்லையோரங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களுக்கு ஆந்திர மக்கள் குவிந்து வருகின்றனர்.
அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு
பெட்ரோல் டீசல் விலையானது ஐந்து மாநில தேர்தலையொட்டி 137 நாட்கள் உயராமல் இருந்து வந்தது. இதனைதொடர்ந்து கடந்த 16 நாட்களில் 14 நாட்களில் பெட்ரோல், டீசல் உயர்ந்து வருகிறது. இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கும் அதேபோல 76 காசுகள் உயர்ந்து ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதே நேரத்தில், ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் எல்லையோர மண்டலங்களில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.122 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் ஆந்திராவில் பெட்ரோல் போடுவதற்கு பதிலாக தமிழகம் மற்றும் கர்நாடாகாவில் பெட்ரோல் மற்றும் டீசலை நிரப்பி வருகின்றனர்.

தமிழக பெட்ரோல் நிலையங்களில் குவியும் மக்கள்
ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் சித்தூர் மாவட்டங்களில் வசிப்பவர்கள் குறைந்த விலையில் எரிபொருளைப் பெறுவதற்கு எல்லைகளைத் தாண்டிச் சென்று கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிற்குவந்து பெட்ரோல் டீசலை நிரப்பி வருகின்றனர். குறிப்பாக நீண்ட தூர பயணம் செய்ய உள்ள லாரிகள், டாக்சிகள் மற்றும் தனியார் வாகனங்களை இயக்குபவர்கள் மற்றும் எல்லைப் பகுதிக்கு அருகில் வசிப்பவர்கள், எரிபொருளுக்காக அடிக்கடி அண்டை மாநிலங்களுக்குச் செல்கின்றனர். இதன் காரணமாக பெட்ரோலுக்கு 10 ரூபாய் வரையும் டீசலுக்கு 6 ரூபாய் வரையும் சேமிக்க முடிகிறது. குறிப்பாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 10 ரூபாய் சேமிக்க முடியும் என்பதால் நீண்ட தூரம் செல்லவுள்ள லாரிகள் மொத்தமாக ஆந்திர எல்லையோரத்தில் உள்ள தமிழகத்தில் பெட்ரோல் மட்டும் டீசலை நிரப்பி வருகின்றனர். இதன் காரணமாக லாரி உள்ளிட்ட கன ரக வாகன ஓட்டிகளுக்கு குறைந்தபட்சம் ரூ 1000 முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை ஒருமுறை சேமிக்கப்படுகிறது.

சரிவை சந்தித்துள்ள பெட்ரோல் நிலையம்?
ஆந்திர மாநிலத்தில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், எல்லையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வாகனங்களில் டேங்குகளை நிரப்ப மலிவான வழிகளைத் தேடுகின்றனர்.இதன் காரணமாக ஆந்திர மாநில எல்லை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் கூட்டம் இல்லாமல் சரிவை சந்தித்து வருகின்றனர்.
