ஸ்விட்சர்லாந்தின் ஹெச்எஸ்பிசி வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிக் கிளைகளில் 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கருப்புப் பணத்தை இந்தியர்கள் பதுக்கி வைத்திருப்பதை வருமான வரித் துறை கண்டு பிடித்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவையில் பேசும்போது ,  வரிப் பிடித்தமே இல்லாத அல்லது குறைந்த வரிவிதிப்பு கொண்ட வெளிநாடுகளில் பணத்தைக் குவித்து வைத்துள்ள 700 இந்தியர்களின் விவரங்களை சர்வதேச புலனாய்வு செய்தியாளர் கூட்டமைப்பு மக்களின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.

இந்தத் தகவல்கள் அனைத்தும் பல்வேறு வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள 11,010 கோடி ரூபாயை வருமான வரித்துறை கண்டறிந்துள்ளதாகவும் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

இதேபோல், ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள ஹெச்எஸ்பிசி வங்கிக் கிளையில் கணக்கு வைத்துள்ள 628 இந்தியர்கள் பற்றிய தகவல், பிரான்ஸ் அரசிடம் இருந்து கிடைத்துள்ளதாக கூறினார். 

இந்தியர்கள் வெளிநாடுகளில் குவித்து வைத்துள்ள கருப்புப் பணம் எவ்வளவு என்பதை அரசு அதிகாரப்பூர்வமாக மதிப்பிடவில்லை என்றாலும், வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் உள்ள கருப்புப் பணத்தின் அளவை மதிப்பிடுவதற்கான ஆய்வை அரசு தொடங்கியுள்ளது  என அருண் ஜெட்லி தெரிவித்தார்.