முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்ல உள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற போது அருண் ஜெட்லிக்கு நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட நடவடிக்கைகளை பிரதமரின் ஆலோசனையின் பேரில் அமல்படுத்தியவர். கடந்த சில ஆண்டுகளாக ஜெட்லி உடல்நிலை சரியில்லா காரணத்தால், அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார்.

அப்போது, அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த காலகட்டத்தில் ஜெட்லியின் பொறுப்பு மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உடல் நிலையை கருத்தில் கொண்டு தேர்தலிலும் போட்டியிடவில்லை. மேலும், அமைச்சர் பதவியும் வேண்டாம் என்று அரசியலில் ஒதுங்கியே இருந்து வந்தார். திடீரென கடந்த ஆகஸ்ட 9-ம் தேதி அருண் ஜெட்லி சுவாசப் பிரச்சனை ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இணை அமைச்சர் அஸ்வினி குமார் உள்ளிட்டோர் இன்று காலை மருத்துவமனைக்குச் சென்று வந்தனர். இதனிடையே, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று ஜெட்லியின் உடல்நிலை குறித்து கேட்டறிய உள்ளதாக செய்திகள் வெளியாகின.