ரூபாய் நோட்டு தடையும், சரக்கு மற்றும் சேவை வரியும் ரொக்க பணப்பரிமாற்றத்தை கடினமாக்கும், அதேசமயம், வரி செலுத்துபவர்களை அதிகப்படுத்தி, இணக்கமடைச் செய்யும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

டெல்லியில் மத்திய நிதி அமைச்சகம் சார்பில், டெல்லி பொருளாதார கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, உள்ளிட்ட நிதி அமைச்சக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் ஜெட்லி பேசியதாவது-

வௌிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிய உள்ள கருப்பு பணத்தையும், உள்நாட்டில் போலி நிறுவனங்கள் மூலம் பதுக்கிய கருப்புபணத்தையும் கண்டுபிடிக்க, பல்வேறு சட்டங்களை மத்திய அரசு இயற்றி இருக்கிறது.

வரி செலுத்தாமல் ஏராளமானோர் அரசை ஏமாற்றி வந்தனர், அரசின் கணக்கில் வராமல் மிகப்பெரிய அளவில் ரொக்கப்பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு வந்தது. அனைத்தையும் அரசு கட்டுப்படுத்தியுள்ளது.

முதல்முதலாக இந்த சூழலை எதிர்கொண்டபோது, மிகவும் சிக்கலாக உதவிசெய்ய ஆள்இன்றி இருந்தோம். ஆனால், ஒவ்வொரு ஆண்டு நிதி மசோதாவில் கொண்டுவரப்படும் சிறிய அளவிலான திருத்தங்கள் மூலம் சிறிய அளவிலான தாக்கமே இருந்தது. அந்த சிறிய மாற்றங்களும் பெரிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அதனால், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதிலும் நீண்ட காலத்துக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நியாயமான, நடவடிக்கைகளை எடுத்து.

ரூபாய் நோட்டு தடையும், ஜி.எஸ்.டி. வரிச் சட்டமும் அடுத்தடுத்து கொண்டு வரப்பட்டதால், ரொக்கப்பணப் புழக்கம் என்பது கடினமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாறவும், அரசுக்கு இணங்கிச் செல்லவும் மக்கள் ஊக்கப்பட்டுள்ளனர். முதல்கட்டமாக டிஜிட்டல் பரிமாற்றம் அதிகரித்து, நேரடி, மறைமுக வரி செலுத்துபவர்கள் அளவும் அதிகரித்ததை நேரடியாக பார்த்தோம்.

மேலும், பினாமி சொத்துத் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தம், அரசியல் வாதிகளுக்கும், நேர்மையற்ற அதிகாரிளுக்கும் ஒரு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. கருப்பு பணத்தை கட்டுப்படுத்தி, வரி செலுத்துவோர்களை அதிகப்படுத்தியுள்ளது

இவ்வாறு அவர் பேசினார்.