மணிப்பூர் மாநிலம் தமங்கலாங்கில், 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை, இந்திய ராணுவ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கருப்புப் பணத்தை ஒழிக்‍கும் நடவடிக்‍கையாக, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. அதன் பின்னர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கணக்கில் வராத பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் தமெங்கலாங் மாவட்டத்தில், இந்திய ராணுவத்தின் ஒரு படைப் பிரிவினர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த வாகனத்தை சோதனையிட்டதில், பெண்ணிடம் 44 லட்சம் ரூபாய் மதிப்பலான பழைய ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்‍கப்பட்டது. இதனையடுத்து, அந்த பணத்தையும், வாகனத்தையும் பறிமுதல் செய்ததுடன், பெண்ணையும் கைது செய்து காவல்துறையிடம் ராணுவ அதிகாரிகள் ஒப்படைத்தனர்.