ஆயுத , விமான விற்பனை உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஆயுத விற்பனையாளர் சஞ்சய் பண்டாரி நாட்டை விட்டு தப்பித்து, லண்டனில் தஞ்சமடைந்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வருமானவரித்துறை, அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகள் சஞ்சய் பண்டாரியிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் அதைத் தவிர்க்க நேபாளம் வழியாக லண்டனுக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் கூறப்படுகின்றன.

ஆயுதத் தரகர்

பாதுகாப்பு துறைக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யும் தரகராக செயல்பட்டு வந்தவர் சஞ்சய் பண்டாரி. கடந்த 2012-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், இந்திய விமானப்படைக்கு பயிற்சி விமானம் வாங்குவதற்கு போடப்பட்ட ரூ.4 ஆயிரம் கோடி ஒப்பந்தத்தில் சஞ்சய் பண்டாரி வரி ஏய்ப்பு செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, வருமான வரித்துறையினர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டார்.

ஆவணங்கள்

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 27-ந்தேதி சஞ்சய் பண்டாரி வீடு, அலுவலங்களில் வருமான வரித்துறையினர், அமலாக்கப்பிரிவினர் சோதனை நடத்தியதில், ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்களில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ரா, சஞ்சய்பண்டாரி ஆகியோருக்கு இடையே தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இருந்தன. ஆனால், இதை ராபர்ட் வத்தா தரப்பு கடுமையாக மறுத்தனர்.

அமலாக்கப்பிரிவு

மேலும், இங்கிலாந்து, துபாய், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் சொத்து வாங்கியது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்தும் சஞ்சய் பண்டாரியிடம் வருமான வரித்துறையினர், அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்தி வந்தனர்.

பாதுகாப்புதுறை

இதற்கிடையே, பாதுகாப்பு துறை தொடர்பான முக்கிய ரகசிய ஆவணங்களை சஞ்சய் வீட்டில் இருந்து வருமான வரித்துறையினர் தேடுதலின் போது கைப்பற்றினர். இதன்அடிப்படையில், டெல்லி போலீசார் கடந்த அக்டோபர் மாதம் அரசாங்க ரகசிய சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்து சஞ்சய் பண்டாரியிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

தப்பி ஓட்டம்

இந்நிலையில், தன்மீதான விசாரணை அமைப்புகளின் பிடிகள் இறுகுவதைத் அறிந்த, சஞ்சய் பண்டாரி நேபாளம் வழியாக லண்டனுக்கு தப்பியதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன் ஜூன் மாதம் லண்டனுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி விடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து டெல்லி போலீஸ் சிறப்பு குற்றப்புலனாய்வு அதிகாரி தாஜ் ஹசனிடம் கேட்டபோது, அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். உள்துறை அமைச்சக அதிகாரிகளும் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.

மல்லையாவைத் தொடர்ந்து..

ஏற்கனவே, ஐ.பி.எல். ஊழலில் லலித் மோடி, தொழிலதிபர் விஜய்மல்லையா ஆகியோர் தப்பிச்சென்று லண்டனில் வாழ்ந்துவரும் நிலையில், அவர்களோடு சஞ்சய் பண்டாரியும் இணைந்துவிட்டார். வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் தப்பிஓடிய விஜய்மல்லையா, லலித்மோடி ஆகியோரை நாட்டு கொண்டு வரமுடியாத அரசை கடுமையாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.இந்நிலையில், இப்போது சஞ்சய் பண்டாரியும் தப்பிவிட்டார். லண்டனில் பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைந்து விட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.