ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமை அலுவலகமானது மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் உள்ள சாண்டா க்ரூஸ் பகுதியில் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் 7 லட்சம் சதுர அடி பரப்பில் கட்டப்பட்டது.

கடும் நிதி நெருக்கடி காரணமாக இந்த அலுவலகத்தைத்  தற்போது அனில் அம்பானி விற்க முடிவு செய்துள்ளார். விற்க முடியாத பட்சத்தில் குத்தகைக்கு விடவும் அவர் திட்டமிட்டுள்ளார். தனது நிறுவனங்களின் நஷ்டத்தால் உண்டான கடன் சுமையை குறைக்கும் பொருட்டு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

இந்த தலைமை அலுவலகம் ரூபாய் 500 கோடி முதல் 2000 கோடி வரை விற்பனையாகக்கூடும் என கூறப்படுகிறது. ஆனால் ரிலையன்ஸ் குழுமம் தலைமை அலுவலகத்தின் விற்பனை விலையை ரூபாய் 3000 கோடி வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது. 

இந்த அலுவலகத்தை விலைக்கு வாங்குவதற்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் தலைமை அலுவலகம் விற்பனை ஆகும் பட்சத்தில், தெற்கு மும்பையில் ரிலையன்ஸ் அலுவலகத்தை மாற்றவும் அனில் அம்பானி திட்டமிட்டுள்ளார். 

இத்தகைய நடவடிக்கை காரணமாக ரிலையன்ஸ் குழுமத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.