ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை பார்த்து கழுதை மேய்ச்சீங்களா என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் 35 வருட அரசியலில் இப்படி அவலமான நிலையை பார்த்ததில்லை என சந்திரபாபு நாயுடு மிகவும் வேதனை அடைந்துள்ளார்.

 

நடந்து முடிந்த ஆந்திர சட்டப்பேரவையில் மாபெரும் வெற்றி பெற்று முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். அவர் பதவியேற்றதும் பல்வேறு துணிச்சலான அதிரடி நடவடிக்கை மற்றும் திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில், சட்டப்பேரவையில் பட்ஜெட் மற்றும் விவசாயிகளின் குறைகள் தொடர்பான விவாதங்கள் எழுந்தது. அப்போது தெலுங்கு தேசம் கட்சியினர், விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க இருப்பதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தவறாக கூறியுள்ளார் என உரிமை மீறல் தீர்மான நோட்டீசைக் கொண்டு வந்தனர்.

 

பின்னர் சந்திரபாபு நாயுடு இந்த தீர்மானத்திற்கு ஜெகன்மோகன் ரெட்டி சரியான விளக்கம் அளித்தால் தான் பதவி விலக தயார் என சவால் விடுத்தார். இதனையடுத்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அந்த நோட்டீசுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தபோது தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, ஆத்திரமடைந்த ஜெகன் மோகன் ரெட்டி எங்கள் ஆதரவாளர்கள் இங்கு 150 பேர் உள்ளனர். அவர்கள் எழுந்து வந்தால் நீங்கள் தரையில்கூட அமர முடியாது என ஆவேசத்தின் உச்சிக்கே சென்றார்.  

இதற்கு முன்னதாக சந்திரபாபு நாயுடு பேசும்போது நாங்கள் யாராவது வாய்திறந்தோமா. யாருக்காவது அறிவு உள்ளதா. இங்கு சட்டமன்ற கூட்டம் நடப்பது உங்களில் ஒருவருக்காவது ஞாபகம் உள்ளதா’ எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவைப் பார்த்து, நீங்கள் இப்படி கண்களைப் பெரிதாக்கிப் பார்த்தால் நாங்கள் அனைவரும் பயந்துவிடுவோமா என்ன. எங்களுக்கு பயம் இல்லை. உங்கள் ஆதரவாளர்களை முதலில் அமரச் சொல்லுங்கள்’ எனக் கடுமையாகப் பேசினார். இதனால் ஆந்திர சட்டப்பேரவையில் அமளியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.