பெண்கள் வீட்டில் நிறுத்தப்பட்டு இருக்கும் ‘கார்’ போல் வெளியே செல்லாமல் இருந்தால் பாலியல் பலாத்காரங்கள் நடக்காது. கார் வெளியே சென்றால், விபத்து நடப்பது போல் பெண்கள் வெளியே சென்றாலும் பலாத்காரங்களும் நடக்கும் என்று ஆந்திர மாநில சபாநாயகர் கொடேலாசிவ பிரசாத் தெரிவித்துள்ளார்.
மாநாடு
ஆந்திர மாநிலத் தலைநகர் அமராவதியில் பெண்களுக்கான தேசிய நாடாளுமன்ற மாநாடு நடந்து வருகிறது. மாநில சபாநாயகர் கொடேலாசிவ பிரசார் கலந்து கொண்டு ‘பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் எதிரான குற்றங்கள் ’ என்ற தலைப்பில் பேசியதாவது-
வீட்டில் நிறுத்தினால்
நீங்கள் ஒரு கார் வாங்குகிறீர்கள். வீட்டில் பாதுகாப்பான இடத்தில் அந்த காரை நீங்கள் நிறுத்தி இருந்தால், விபத்துக்கள் நடக்குமா?, விபத்துக்களை தவிர்க்கலாம் தானே?. அந்த காரை நீங்கள் சாலையில் அல்லது கடைத் தெருவுக்குள் ஓட்டிச் செல்லும் போது விபத்துக்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கத்தானே செய்யும். அந்த காரை வேகமாக ஓட்டிச் செல்லும் போது, விபத்து நடக்க வாய்ப்பு அதிகம்.
பாதுகாப்பு
பெண்கள் எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன் பாதுகாப்பாகத்தான் இருந்தார்கள். அப்போது எல்லாம் அவர்கள் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல மாட்டார்கள். இதனால், அனைத்து விதமான தொந்தரவுகள், பலாத்காரங்கள், அநீதிகளுக்கும் ஆளாகாமல் பாதுகாப்பாக வீட்டில் இருந்தார்கள்.
வெளியே செல்கிறார்கள்
இப்போது, வேலைக்கு செல்ல, படிப்பதற்காக, என பல விசயங்களுக்காக வெளியே செல்கிறார்கள். தங்களை வெளிப்படுத்திக்கொள்கிறார்கள், அவ்வாறு பெண்கள் வெளியே நடக்கும் போது, ஈவ் டீசிங், பலாத்காரம், பாலியல் சீண்டல்கள், கற்பழிப்புகள், கடத்தல் நடக்கிறது. வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்தால், இதெல்லாம் நடக்காது என்று தெரிவித்தார்.
தற்காப்பு கலைகள்
இந்த வார்த்தைகள் பேசியவுடன், சபாநாயகர் சிவபிரசாத் தன்னை சுதாரித்துக் கொண்டு, தவறாக பேசியதை உணர்ந்து கொண்டார். பின் பேசுகையில், “ நான் பெண்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறவில்லை.அவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும், அவர்களுக்கு வேலைவாய்ப்பையும், அதன்மூலம் பணம் சம்பாதிக்கவும் ஊக்கப்படுத்த வேண்டும். இதற்கு அவர்களுக்கு பாதுகாப்பு என்பது மிக அவசியம். பெண்களுக்கு சுயபாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
