ஆந்திராவில் அரசு அலுவலகங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக் கொடியின் வண்ணத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மக்களவை தேர்தலுடன் நடைப்பெற்ற ஆந்திர மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 150-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி ஆட்சியை பிடித்தது. ஆனால், அங்கு பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியை தழுவியது. 

முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு அம்மாநிலத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்களை கொண்டு வந்து அசத்தினார். இதனிடையே, அரசின் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறும் வகையில், கிராமங்களில் தலைமைச் செயலகம் என்ற பெயரில் புதிய  திட்டத்தை ஆந்திர அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக அனைத்து கிராமங்களிலும் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. 

கிராம தலைமை செயலக கட்டிடங்களுக்கு ஆளும் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் கட்சிக்கொடி உள்ள வண்ணங்களில், பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆந்திராவில் அரசு அலுவலகங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக் கொடியின் நிறம் அடிக்கப்பட்டு வருவதற்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.  

இது தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் லங்கா தினகரன் கூறுகையில், ஜெகன் மோகன் மக்கள் வரிப் பணத்தை தவறாக செலவிட்டு வருகிறார். அரசு கட்டிடங்களுக்கு அவரது கட்சி கொடியின் வண்ணத்திலேயே பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. அதற்காக அரசு கருவூலத்தில் உள்ள பணத்தை எடுத்து செலவிடுகிறார்கள். கட்சி கொடியின் வண்ணத்தில் கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிக்க வேண்டுமானால் அவர்கள் கட்சி சார்பில் சொந்த பணத்தை கொண்டு செய்யட்டுமே என கூறியுள்ளார். பல மாநில கட்சிகள் வாரிசு அரசியல் செய்து வருகின்றன. இதை தான் தெலுங்குதேசம் பின்பற்றியதை இப்போது ஜெகன்மோகனும் பின்பற்றி வருகிறார் என விமர்சனம் செய்துள்ளார்.