ரஜினிகாந்த் மீது விமர்சனம்; ஜெகன் மோகன் ரெட்டி பகிரங்க மன்னிப்பு கேட்க சந்திரப்பாபு நாயுடு வலியுறுத்தல்!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து இருக்கின்றனர். இதற்கு முதல்வரும், கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வாரம் விஜயவாடாவில் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், நடிகரும், முன்னாள் முதல்வருமான மறைந்த என்டி ராமா ராவின் நூற்றாண்டு விழா நடந்தது. இந்த விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் அழைக்கப்பட்டு இருந்தார். அப்போது, சந்திரப்பாபு நாயுடுவின் திறமை பற்றி புகழ்ந்து பேசி இருந்தார். ஆந்திரா பிரிக்கப்படாமல் இருந்தபோது, எவ்வாறு சந்திரப்பாபு நாயுடு திறன்பட கூர்நோக்குப் பார்வையில் திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி இருந்தார் என்று கூறி இருந்தார்.
இதையடுத்து நடிகையும், ஆந்திரா அமைச்சருமான ரோஜா கடுமையாக ரஜினிகாந்த்தை விமர்சித்து இருந்தார். ரஜினிகாந்த் பேசி இருப்பது நகைப்புக்குரியது என்று தெரிவித்து இருந்தார். அமைச்சர் அம்பாதி ராம்பாபு, ''ரஜினிகாந்த் கோழை. அரசியல் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர்'' என்று பேசி இருந்தார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரான கோடலில் நானி தனது விமர்சனத்தில், ''தமிழ்நாட்டில் வேண்டுமானாலும் ரஜினிகாந்த் ஹீரோவாக இருக்கலாம், ஆனால் ஆந்திராவில் அவர் ஒரு ஜீரோ'' என்று தெரிவித்து இருந்தார்.
அவருக்கு ஒண்ணும் தெரியாது! என்டிஆர் பற்றிய ரஜினியின் பேச்சுக்கு அமைச்சர் ரோஜா பதிலடி
இதையடுத்து, ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சந்திரபாபு நாயுடு தனது டுவிட்டர் பதிவு மூலம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். அதில், ''அண்ணனின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று அவருடனான தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அநாகரீகமான விமர்சன தாக்குதலை மனம் புண்படுத்தும் மற்றும் மூர்க்கத்தனமாக வைத்து வருகின்றனர். சமூகத்தில் மிகவும் மதிக்கப்படும் ரஜினி காந்த் போன்ற பழம்பெரும் ஆளுமைகள் குறித்து ஒய்எஸ்ஆர் தலைவர்கள் கூறியுள்ள கேவலமான கருத்துகள் அனைவரையும் வேதனைக்குள்ளாக்குகிறது.
''ஒய்எஸ்ஆர் அரசின் போக்கை ரஜினிகாந்த் விமர்சிக்கவில்லை. யாரையும் கெட்ட வார்த்தையில் பேசவும் இல்லை. அவர் பல தலைப்புகளில் தனது கருத்துக்களை மட்டும் பகிர்ந்து கொண்டார். இருப்பினும், அவர் மீது அதீத ஆணவத்துடன் வீண் விமர்சனம் செய்வதை தெலுங்கு மக்கள் யாரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். சிகரம் போன்ற ஆளுமை கொண்ட ரஜினியின் குணாதிசயத்தை உங்கள் கட்சி தலைவர்கள் விமர்சிப்பது வானத்தில் எச்சில் துப்புவதைப் போன்றது. ஜெகன் கட்டுப்பாட்டில் இருக்கும் தலைவர்கள் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு தங்கள் தவறை திருத்திக் கொள்ள வேண்டும். அவர்களை ஜெகன் கட்டுப்படுத்த வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு - பின்னணி என்ன?