‘இந்திய-இத்தாலிய டி.என்.ஏ. கலப்பினம்தான் ராகுல் காந்தி’ என்று மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே கொச்சையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இந்தக் கொச்சையான சர்ச்சையான கருத்தை தெரிவித்தார். அவர் மேலும் பேசும்போது, “இந்தக் கலப்பினம் காங்கிரஸ் ஆய்வுக்கூடத்தை தவிர வேறு எங்குமே கிடைக்காது. ராகுல்காந்தியின் தாத்தா போரஸ் காந்தி பார்சி இனத்தைச் சேர்ந்தவர். அவருடைய அம்மா சோனியா காந்தி கிறிஸ்தவத்தைச் சேர்ந்தவர். 

அப்படி இருக்கும்போது ராகுல்காந்தி மட்டும் எப்படி பிராமணர் ஆக முடியும்? என்று தெரிவித்துள்ளார். ரஃபேல் விவகாரம் பற்றி ராகுலை விமர்சிக்க தொடங்கிய அனந்தகுமார், திடீரென அதிலிருந்து தடம் மாறி தனி மனித விமர்சனத்தில் ஈடுபடத் தொடங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக கொச்சையாக விமர்சனம் செய்துவருவதால், அவரைப் பலரும் கண்டித்துவருகிறார்கள். 

அனந்தகுமார் சர்ச்சையாக பேசுவதில் பெயர் போனவர். அண்மையில் இவர், எழுத்தாளர்களுக்கு தந்தை யார் என தெரியாது என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். சில தினங்களுக்கு முன்பு, இந்து பெண்ணை யாராவது தொட்டால், கையை வெட்டுங்கள் என்று கூறி புதிய சர்ச்சையில் சிக்கினார்.

இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ராகுல், அவரை அமைச்சர் பதவியை விட்டு நீக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ராகுல் காந்தியை சீண்டி அருவருக்கத்தக்க வகையில் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.