டெல்லியில் அமித்ஷா கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோஷம் எழுப்பிய வாலிபரை தொண்டர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி சட்டப்பேரவை அடுத்த மாதம் 8-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சியினர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், எப்படியாவது இந்த முறை ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் அமித்ஷா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பாபர்புர் சட்டப்பேரவை தொகுதியில் நடந்த பாஜகவின் பிரச்சார கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்றார். அவர் பாஜக வேட்பாளரை ஆதரித்து பேசி கொண்டிருந்தார். 

அப்போது இளைஞர் ஒருவர் திடீரென்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, கோஷம் எழுப்பிய இளைஞரை பாஜக தொண்டர்கள் சரமாரியாக தாக்கி அடித்து உதைத்தனர். இதை பார்த்த அமித்ஷா உடனே, அந்த இளைஞரை மீட்கும்படி தனது பாதுகாவலர்களிடம் கூறினார். 

இதையடுத்து கூட்டத்தினரிடம் இருந்து இளைஞரை மீட்டனர். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, அமித்ஷா கூட்டத்தில் கோஷம் எழுப்பிய இளைஞரிடம் எந்த அடையாள அட்டையும் இல்லை. பின்னர் அவர் தனது வீட்டு முகவரியை கொடுத்தார். இதையடுத்து அவரது பெற்றோரை வரவழைத்து ஒப்படைக்கப்பட்டார்.

 டெல்லியில் சங்கம் விஹார் பகுதியில் வசிக்கும் அந்த இளைஞர் டெல்லியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வருவதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.