மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வீட்டுக்கு அருகே பாரதிய ஜன சங்க நிறுவனர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜியின் சிலை உள்ளது. இந்த சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. 

ஏற்கனவே திரிபுராவில் லெனின் சிலை, பாஜகவினரால் அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கொல்கத்தாவில் ஷ்யாம் பிரசாத் முகர்ஜியின் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.  ஷ்யாம் பிரசாத் முகர்ஜியின் சிலையில் உள்ள முகத்தில் கருப்பு வண்ணம் பூசிய மர்ம நபர்கள் அச்சிலையின் கீழ் தீவிரவாதி என எழுதி சென்றுள்ளனர்.

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள பெரியார் சிலை அகற்றப்படும் என்று பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அவரது இந்த பதிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்ட நிலையில், நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட நிலையில், உத்தரபிரதேசத்தில், மீரட் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

சிலை உடைப்பு சம்பவங்களால் பிரதமர் நரேந்திர மோடி கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சிலைகள் உடைப்பு சம்பவங்களைத் தடுக்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சகத்துக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு போலீஸ் அளிக்கப்பட்டுள்ளது.