நாட்டில் உள்ள அனைத்துச் சாலைகளும் சிமெண்ட் கான்கிரீட் சாலைகளாக மாற்றப்பட வேண்டும் என்றும் அத்தகைய சாலைகள் 200 ஆண்டுகளுக்கு தாக்குப்பிடிக்கும் எனவும் நிதின்கட்கரி உறுதியளித்துள்ளார்.  

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பை அருகே, பேருந்து மற்றும் கார்களை இயக்கும் நிறுவனங்களின் சார்பில் பிரவாஸ்-2017 என்ற நிகழ்ச்சியை மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர், மும்பையில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் இன்றும் நல்ல நிலையில் இருப்பதாகவும், ஆனால் சில அரசியல் கட்சித் தலைவர்களும், அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் அதை விரும்புவதில்லை எனவும் தெரிவித்தார்.

தார்ச்சாலைகள் அமைத்து, அவற்றில் அவ்வப்போது பள்ளம் ஏற்பட வேண்டும் என்பதே அத்தகைய நபர்களின் விருப்பம் என்றும் நாட்டில் உள்ள அனைத்துச் சாலைகளும் சிமெண்ட் கான்கிரீட் சாலைகளாக மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தகைய சாலைகள் 200 ஆண்டுகளுக்கு தாக்குப்பிடிக்கும் என உறுதியளிப்பதாக நிதின்கட்கரி கூறினார்.