ராஜஸ்தான் முதல்வர் யார்? சவுகானை போல் வசுந்தரா ஒதுக்கப்படுவாரா? இன்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!
ராஜஸ்தானின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த கேள்விக்கு இன்று விடை தெரிவதற்கான சூழல் நிலவுகிறது
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 7ஆம் தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில், தெலங்கானா, மிசோரம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸும், மிசோரமில் ஜோரம் மக்கள் இயக்கமும் வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து, தெலங்கானா முதல்வராக காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டியும், மிசோரம் முதல்வராக ஜோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்துஹோமாவும் பதவியேற்றுள்ளனர். ஆனால், மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்ற பாஜக அம்மாநிலங்களில் முதல்வர் யார் என்பதை அறிவிக்காமல் இருந்ததால், எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு உள்ளானது.
அதன் தொடர்ச்சியாக, பழங்குடியின தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஷ்னு தியோ சாய் என்பவரை சத்தீஸ்கர் முதல்வராகவும், மோகன் யாதவ் என்பவரை மத்தியப்பிரதேச முதல்வராகவும் பாஜக அறிவித்தது. ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் இதுவரை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், ராஜஸ்தானில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இதன் மூலம், அம்மாநிலத்தில் புதிய முதல்வர் யார் என்பது குறித்த கேள்விக்கு இன்று விடை தெரிவதற்கான சூழல் நிலவுகிறது. இந்த நடவடிக்கைகளை மேற்பார்வையிட மேலிட பார்வையாளர் ராஜ்நாத் சிங் இன்று ஜெய்ப்பூர் செல்லவுள்ளார். மற்ற மேலிட பார்வையாளர்களான சரோஜ் பாண்டே மற்றும் வினோத் தாவ்டே ஆகியோர் நேற்றிரவே ராஜஸ்தான் வந்து விட்டனர்.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பாஜக அலுவலகத்தில் காலை 11 மணிக்குத் தொடங்கும் என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. முதலில் எம்.எல்.ஏ.க்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதன்பிறகு, மதிய உணவுக்குப் பிறகு முதல்வரின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.
சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசத்தில் யாரும் எதிர்பாரா முகங்களை முதல்வர்களாக அறிவித்து அனைவருக்கும் பாஜக ஆச்சரியமளித்தது. எனவே, ராஜஸ்தானில் இரண்டு முறை முதல்வராக இருந்த வசுந்தரா ராஜே சிந்தியா, முதல்வர் ரேஸில் இருந்து ஓரங்கட்டப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதற்கு முந்தைய தேர்தலில் முதல்வர் வேட்பாளரை பாஜக அறிவித்தது. அதுபோலல்லாமல், இந்த முறை ராஜஸ்தானில் கூட்டுத் தலைமையின் அடிப்படையில் பாஜக போட்டியிட்டது. தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே, வசுந்தரா ராஜேவுக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவிக்கும் போக்கு காணப்படுகிறது. அவரது இல்லத்திற்கு ஏராளமான சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை தருவதும், அவரை முதலமைச்சராக நியமிக்கக் கோரி கோஷம் எழுப்புவதும் நிகழ்கிறது.
வசுந்தரா ராஜே வீட்டில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக மூத்த தலைவர் ராஜேந்திர ரத்தோர், “பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்காக பாஜகவுக்கு வாக்குகள் குவிந்துள்ளன. அவர் எங்கள் கட்சியின் முக்கிய முகம். முழக்கமிட்டு ஆதரவை கோருவது, பாஜகவின் கலாச்சாரத்திற்கு முரணானது.” என்றார்.
முதல்வரின் பெயரை அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்து பேசிய ரத்தோர், இன்னும் சில மணி நேரங்கள் காத்திருப்புக்கு பின் விடை கிடைக்கும். மேலிடத்தின் அறிவுறுத்தலின்படி பார்வையாளர்கள் செயல்படுவார்கள். ஜெய்ப்பூரில் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்திற்கு பிறகு முதல்வர் பெயர் அறிவிக்கப்படும். கட்சி எம்.எல்.ஏ.க்கள் முடிவின்படி, முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டு ராஜஸ்தானில் இரட்டை எஞ்சின் ஆட்சியை பாஜக அமைக்கும்.” என்றார்.
தகுதி நீக்கத்தை எதிர்த்து மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
இன்றைய கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுத்த பிறகு, ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரப்படும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 10க்கும் மேற்பட்ட அமைச்சர்களுடன் முதல்வர் பதவியேற்பு விழா ஜெய்ப்பூரில் டிசம்பர் 15ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற மாற்றங்களையடுத்து, அனைவரது கவனமும் இப்போது ராஜஸ்தான் பக்கம் திரும்பியுள்ளது. பிராமணர், வைஷியா மற்றும் ராஜபுத்திர சமூகங்கள் உட்பட அதன் பொதுசமூகத்தை சேர்ந்தவர்களை முதல்வராக தேர்ந்தெடுக்க பாஜக பரிசீலித்து வருவதாக தெரிகிறது. முதல்முறையாக ராஜஸ்தானில் முதல்வருடன் இரண்டு துணை முதல்வர்களை நியமிக்கும் முடிவும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற இந்த முக்கியமான முடிவுகளை பாஜக எடுக்கும்போது, ஒரு புதிய முகம் அம்மாநிலத்தை வழிநடத்தும் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.
வசுந்தரா ராஜே தவிர, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், தியா குமாரி, பாபா பாலக்நாத், அர்ஜுன் ராம் மெக்வால், கிரோடி லால் மீனா, சிபி ஜோஷி ஆகியோரும் ரேஸில் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.