Asianet News TamilAsianet News Tamil

மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம் - வங்கி ஊழியர் சங்கம் எச்சரிக்கை

all bank-staffs-union-strike
Author
First Published Dec 27, 2016, 10:16 AM IST


“பணப்பிரச்னை தொடர்ந்தால் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்” என்று அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசு கடந்த நவம்பர் 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்தது. இந்த திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கியை முற்றுகையிட்டு தினமும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது.

மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகள் டிசம்பர் 30ம் தேதியுடன் முடிகிறது. அதன் பிறகு வாரத்துக்கு ரூ.24,000 எடுக்க முடியும் என்ற உச்சவரம்பு தளர்த்தப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனென்றால் வங்கிகளுக்கு தொடர்ந்து பணத்தட்டுப்பாடு இருந்து வருகிறது.

மத்திய அரசு 500, 1000 நோட்டுக்களுக்கு தடை விதிப்பதற்கு முன்னர் ஒவ்வொரு வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி வாரத்துக்கு ரூ.20 கோடி வரை வழங்கியது. ரூபாய் நோட்டு தடைக்கு பின்னர் தற்போது ரூ.3 கோடி மட்டுமே ஒவ்வொரு வங்கிகளுக்கும் வழங்கப்படுகிறது. அதனை கிளைகளுக்கு பிரித்து வழங்கினால் தலா கிளைக்கு 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை கிடைக்கிறது.

பணத்தட்டுப்பாடு காரணமாக ஏற்கனவே வங்கிகளில் நிர்ணயிக்கப்பட்ட 24,000 கொடுக்க முடியாத நிலை உள்ளது. பெரும்பாலான ஏடிஎம்கள் இன்னும் இயங்கவி. எல்லா வங்கிகளுக்கும், ரிசர்வ் வங்கி சீராக பணம் அனுப்புவதும் இல்லை. குறிப்பிட்ட தனியார் வங்கிகளுக்கு மட்டும் கூடுதல் பணத்தை ரிசர்வ் வங்கி தருகிறது. அந்த நிலையை மாற்றி எந்தெந்த வங்கிகளுக்கு எவ்வளவு பணம் வழங்கப்படுகிறது என்ற விவரத்தை ரிசர்வ் வங்கி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். சீராக பணம் அனுப்பாவிட்டால் வங்கிகள் மூலம் பணம் வழங்குவதை ரிசர்வ் வங்கி நிறுத்தி வைக்க வேண்டும்.

குறிப்பிட்ட மனிதர்களிடம் புதிய ரூபாய் நோட்டுக்கள் கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்டு வருகிறது. அந்த பணம் எந்த வங்கிகளில் இருந்து சென்றது என்பதை சிபிஐ விசாரிக்க வேண்டும். தவறு செய்த வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பணத்தை வழங்குவதற்கு ஏற்றார் போல் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். பொதுமக்களின் அவதியை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வரும் 28ம் தேதி அனைத்து நகரங்களில் அடையாள போராட்டம் நடத்தப்படும். 29ம் தேதி நிதி அமைச்சகத்துக்கு தொழிற்சங்கங்கள் சார்பில் கடிதம் அனுப்பப்பும் போராட்டம் நடத்தப்படும்.

ஜனவரி 2ம் தேதி கோரிக்கைகள் அடங்கிய அட்டையை சட்டையில் அணிந்து வங்கி ஊழியர்கள் பணியாற்றுவார்கள். 3ம் தேதி தர்ணா போராட்டம் நடத்தப்படும். இந்த பிரச்சனை தொடர்ந்தால் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios