உலகப் பொருளாதார நெருக்கடி, பெருமந்தம் உண்டான போது, நம் நாட்டின் பொருளாதாரம் சரிவடையாமல் காப்பாற்றியது கருப்பு பணம்தான் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள் என்று உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் சர்ச்சைக்குரிய வகையில் கிண்டல் செய்துள்ளார்.
லக்னோவில் இந்தியா-மியான்மர்-தாய்லாந்து நாடுகள் இணைந்து நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் நேற்று கலந்துகொண்டார்.

பாதிப்பு ஏற்படவில்லை
அப்போது அவர் பேசுகையில், “ கருப்பு பணம் உருவாவது தடை செய்யப்பட வேண்டும் என்ற ஒரு விஷயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். உலகப்பொருளாதார நெருக்கடியின் போது, இந்தியாவில் எந்தவிதமான பொருளாதார பாதிப்பும் ஏற்படவில்லை.
காரணம்
ஏனென்றால், நாட்டின் பொருளாதாரத்துக்கு இணையான கருப்பு பண பொருளாதாரம் செயல்பட்டு வந்தது. அதனால்தான், நாம் காப்பற்றப்பட்டோம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆக நம் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து கருப்பு பணமே காப்பாற்றியது. நான் கருப்பு பணத்தை எதிர்கிறேன். அது எனக்குத் தேவையில்லை.
எந்த அரசும், ஏழை மக்களால் தொந்தரவுக்கு ஆளானதில்லை. ஆனால், இந்த அரசு சாமானிய மக்களின் கடினமான துன்பத்துக்கு காரணமாக இருக்கிறது.
தீர்வாகாது
ஊழல் தடுக்கப்படுகிறது என்பது நல்ல விஷயம்தான். அதேசமயம் , எந்த இடத்திலும் ஊழல் இருக்கக் கூடாது என்று மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றுவதன் மூலம், ஊழல் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. அடுத்து வரும் ரூ.2000 நோட்டுக்காகவும் ஒரு சில காத்திருக்கிறார்கள்.

அனுமதி
ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை அவசரகதியில் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரு பவர்கள் இந்த அறிவிப்பு மூலம், ஏராளமான சிக்கல்களை சந்திக்கிறார்கள். ஆதலால், இதில் நிதியமைச்சர் தலையிட்டு, தனியார் மருத்துவமனைகளும், சிறு நர்ஸிங் ஹோம்கள், மருந்தகங்கள் நவம்பர் 30-ந்தேதி வரை, பழைய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
இந்த செல்லாத அறிவிப்பு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகிறார்கள். அது அவர்களை பெரிய அபாயத்தில் தள்ளும். மருத்து சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு மட்டும் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை அனுமதிக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
மேலும், வெளிநாட்டுப்பயணிகள் சந்திக்கும் பிரச்சினைத் தீர்க்க, பணப் பரிமாற்ற கவுன்ட்டர்களை அதிகமாக திறக்க தலைமை செயலாளர்களுக்கு முதல்வர் அகிலேஷ் உத்தரவிட்டுள்ளார்.
