சமாஜ்வாதிக் கட்சியில் முலாயம் சிங், அகிலேஷ் யாதவ் இடையே ஏற்பட்டுள்ள மோதலைத் தொடர்ந்து சமாஜ்வாதிக் கட்சியின் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள வங்கிக் கணக்குகள் முடக்கிவைக்கப்பட்டுள்ளன.

சமாஜ்வாதி கட்சியில் முதலமைச்சர் அகிலேஷ் யாதவுக்கும் அவர் தந்தை முலாயம்சிங்கிற்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இருதரப்புக்கும் இடையே பலமுறை பேச்சுவார்த்தை நடந்தும் சுமுகத்தீர்வு எட்டப்படவில்லை. நேற்று காலை சிவபால் யாதவை சந்தித்த அகிலேஷ் யாதவ் தமது மனக்குறைகளை தெரிவித்தார். 
வேட்பாளர் தேர்வு முழுவதும் தமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று அகிலேஷ் கூறியதாகவும் இதற்கு சிவபால் யாதவ் உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 

இதையடுத்து முலாயம்சிங்கை சந்தித்த சிவபால் யாதவ் அகிலேஷின் குமுறலை வெளிப்படுத்தினார். தந்தை- மகன் மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமாஜ்வாதி கட்சியின் வங்கிக் கணக்குகளை அகிலேஷ் யாதவ் முடக்கி வைத்துள்ளார். வழக்கமாக சிவபால் யாதவ் கையெழுத்துடன் அந்த கணக்குகள் இயங்கி வந்தன. அகிலேஷ் யாதவ் முறையிட்டதன் பேரில், சமாஜ்வாதிக் கட்சியின் கணக்குகளை பயன்படுத்த முடியாதவாறு வங்கிகள் முடக்கி வைத்துள்ளன.