சைக்கிள் சின்னம் யாருக்கு? – தேர்தல் ஆணையம் இன்று முடிவு.
சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்திற்கு உரிமை கோரி முலாயம்சிங், அகிலேஷ் யாதவ் ஆகியோா் தனித்தனியாக தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ள நிலையில், அக்கட்சியின் சின்னம் முடக்கப்படுவது குறித்து தேர்தல் ஆணையம் இன்று முடிவு செய்ய உள்ளது.
சமாஜ்வாதி கட்சியில் முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது தந்தையும் கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கட்சியை கைப்பற்ற அகிலேஷ் யாதவ், அவரது தந்தை முலாயம் சிங் ஆகியோரின் ஆதரவாளர்கள் உச்சக்கட்ட மோதலில் ஈடுபட்டுள்ளனா்.
இதனிடையே, உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் 17ம் தேதி தொடங்க உள்ள நிலையில் கட்சியில் பிளவு ஏற்படுவதைத் தடுக்கவும் சைக்கிள் சின்னத்தை மீட்கவும் முலாயம்சிங் யாதவ் நேற்று டெல்லி புறப்பட்டார்.
தேர்தல் ஆணையத்திடம் அவர் அளித்த மனுவை திரும்பப் பெற்று சைக்கிள் சின்னத்தை கட்சிக்கு மீட்டுத் தரலாம் என்று அவருடைய ஆதரவாளர்கள் கருதுகின்றனா். அப்படி முலாயம்சிங் தமது மனுவை திரும்பப் பெறாவிட்டால் சைக்கிள் சின்னம் முடக்கப்படும் என்பதால் வேறு சின்னங்களைக் கோருவது குறித்து இருதரப்பினரும் தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அக்கட்சியின் சைக்கிள் சின்னம் முடக்கப்படுவது குறித்து தேர்தல் ஆணையம் இன்று முடிவு செய்ய உள்ளது.
