தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ. 3 ஆயிரம் கோடி முதலீட்டில் பேமெண்ட் வங்கியை முறைப்படி நாடு முழுவதும் தொடங்கியது.

கடந்த நவம்பர் 23-ந்தேதி முதல் ராஜஸ்தான், தெலங்கானா, கர்நாடக மாநிலங்களில் சோதனை முயற்சியாக 10 ஆயிரம் பேமெண்ட்வங்கிகளை ஏர்டெல் நிறுவனம் தொடங்கியது.

கடந்த இரு மாதங்களில் அந்த நிறுவனத்துக்கு ஏறக்குறைய 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கிடைத்து பெரும் வரவேற்பு  உண்டானது. இதையடுத்து, முறைப்படி நாடுமுழுவதும் பேமெண்ட் வங்கியை இன்று தொடங்கியது.

டெல்லியில் நடந்த விழாவில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி ஏர்டெல் பேமெண்ட் வங்கியைத் தொடங்கி வைத்தார்.

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் கூறுகையில், “ நாங்கள் தொலைத்தொடர்பு சேவையில் காலடி எடுத்த வைத்தபின், மக்களுக்கு சலுகை விலையில் சேவை அளித்தோம்.

அதேபோல, இந்த பேமெண்ட் வங்கி மூலம் கிராமங்களில் வங்கிசேவை கிடைக்காத மக்களுக்கும் வங்கியை திறன் வாய்ந்த முறையில் வேகமாகக் கொண்டு செல்வோம்.

எங்கள் பயணத்தில் ஏர்டெல் பேமெண்ட் வங்கி மற்றொரு முக்கிய சகாப்தமாகும். மக்களின் வாழ்க்கை முறையை மாற்றி, நாட்டில் நிதிப்புழக்கத்தை ஏற்படுத்தும்.

இதில் 80சதவீத பங்குகளை ஏர்டெல் நிறுவனமும், மீதமுள்ளதை கோட்டக் மகிந்திரா வங்கியும் வைத்துக்கொள்ளும்.

முதல்கட்டமாக ரூ. 1000 கோடியை முதலீடு செய்கிறோம். ஒட்டுமொத்தமாக ரூ. 3 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய இருக்கிறோம்.

ஏர்டெல்லில் இப்போது வாடிக்கையாளர்களாக இருக்கும் 27 கோடி மக்களில் 10 கோடி மக்களையாவது பேமெண்ட் வங்கியில் கணக்கு தொடங்க வைப்போம் என்று நம்புகிறேன்.

ஏர்டெல் பேமெண்ட் வங்கியில் கணக்கு தொடங்க விரும்பும், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அவர்களின் மொபைல் எண்ணையே கணக்கு எண்ணாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஒரு ஆண்டுக்குள் 6 லட்சம் கிளைகளை நாடுமுழுவதும் தொடங்கி விடுவோம். முதல்கட்டமாக 2.6 லட்சம் கிளைகளில் பேமெண்ட் வங்கியைத் தொடங்குகிறோம்.

எங்கள் வங்கியில் ஆண்டுக்கு சேமிப்புகணக்குக்கு ஆண்டுக்கு 7.25 சதவீத வட்டி வழங்கப்பட இருக்கிறது. ஏர்டெல் பேமெண்ட் வங்கியில் கணக்கு வைத்து இருந்தால், எந்த வங்கிக்கும், எந்த கணக்குக்கும் பணத்தை பரிமாற்றம் செய்யலாம், மொபைல் வாலட்டுக்கும் பணத்தை அனுப்பலாம். 

அதேசமயம், ஏர்டெல் கணக்கில் இருந்து ஏர்டெல் கணக்குக்கு பணம் பரிமாற்றம் செய்தால் கட்டணம் ஏதும் இல்லை. மக்கள் தங்களின் ஆதார் அட்டை உதவியுடன் 3 நிமிடங்களில் வங்கிக்கணக்கு தொடங்கிவிடலாம்.

வேறு எந்த ஆவணங்களும் தேவையில்லை. ஆதார் மட்டுமே போதுமானது'' என்று தெரிவித்தார்.