ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்துசெய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. 

கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் விதிமுறைகளை மீறி முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இதில், கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் முறைகேடாக பணம் பெற்றதாக சிபிஐ குற்றம்சாட்டியது. இது தொடர்பாக அமலாக்கத்துறையும், சிபிஐயும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. இதையடுத்து, தங்களை கைது செய்ய தடை விதிக்க கோரி இருவரும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். 

இந்த வழக்கின் தீர்ப்பில் சிபிஐ கோரிக்கை நிராகரிக்கப்பட்டு ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. மேலும், இருவரும் வெளிநாடு செல்லக்கூடாது. ரூ.1 லட்சம் பிணைத்தொகை செலுத்த வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்தது. 

இந்நிலையில், டெல்லி சிறப்பு நீதிமன்றம் கூறிய தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த முறை ப.சிதம்பரத்தின் மகனையும் கைது செய்ய சிபிஐ தீவிரம் காட்டி வருகிறது.