Russia-Ukraine crisis:இந்தியர்களை மீட்க உக்ரைன் புறப்பட்டது டாடாவின் ஏர் இந்தியா சிறப்பு விமானம்
ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்துவர டாடா நிறுவனத்தின் ஏர் இந்தியா சிறப்பு விமானம் டெல்லியிலிருந்து இன்று புறப்பட்டுச் சென்றது.
ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்துவர டாடா நிறுவனத்தின் ஏர் இந்தியா சிறப்பு விமானம் டெல்லியிலிருந்து இன்று புறப்பட்டுச் சென்றது.
இன்று இரவு உக்ரைனிலிருந்து இந்திய மாணவர்கள் உள்பட இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் தாயகம் அழைத்து வருகிறது. உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்துவர 3 சிறப்பு விமானங்களை இயக்குவதாக டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்திருந்தது.
அதன்படி, ஏர் இந்தியாவின் போயிங் ட்ரீம்லைனர் 1947 ரகவிமானம் சென்றுள்ளது, இந்த விமானத்தில் 200 பேர் வரை பயணிக்க முடியும்
விமானப் போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில் “உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க 3 விமானங்களை இயக்குவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்திருந்து. இதன்படி இதில் முதல் விமானம் இன்று அதிகாலை உக்ரைனுக்கு புறப்பட்டுள்ளது.
உக்ரைனிலிருந்து தாயகம் திரும்ப விருப்பம் இருப்போரை அழைத்துக்கொண்டு இன்று இரவு அந்த விமானம் புறப்படும். அடுத்ததாக 24 மற்றும் 26ம் தேதிகளில் ஏர் இந்தியா விமானம் இயக்கப்படும். டெல்லியிலிருந்து இன்று காலை புறப்பட்டுள்ள ஏர் இந்தியா விமானம் உக்ரைனின் போர்ஸ்பில் நகருக்குச் செல்கிறது” எனத் தெரிவித்தனர்.
இதற்கிடையே உக்ரைனில் இருக்கும் இந்திய தூதரகத்தைச்ச சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப மத்திய அரசு கேட்டுக்கொண்டது. மேலும், உக்ரைனில் பதற்றமும் நிலையற்றதன்மையும் அதிகரித்திருப்பதால், தேவையின்றி தங்கியிருக்கும் இந்தியர்கள் வெளியேறவும் எனவும் கேட்டுக்கொண்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்கள், தங்களை அழைத்துவந்த ஏஜென்ட்டுகளை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவர்களை தொடர்பு கொள்ள முடியாவிட்டால், இந்தியத் தூதரகத்தின் ஃபேஸ்புக், ட்விட்டரை பின்தொடர்ந்து தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம், உதவியும் கோரலாம் என இந்தியத்தூதரகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
இதற்கிடையே ரஷ்யா-உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சலில் இந்தியா சார்பில் ஆழ்ந்த கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியப் பிரதிநிதி திருமூர்த்தி கூறுகையில் “ இரு நாடுகளுக்கும் இடையே எழுந்துள்ள பதற்றத்தை குறைக்க உடனடி முன்னுரிமை அளிக்க வேண்டும். அனைத்து நாடுகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்